இந்தப் புத்தகம்…
தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய கட்டுரைகள் இருவேறு தொகுப்புகளாக 1936-ல் வெளியாயின. அந்த நூல்கள் தற்போது ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன. கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளியான கட்டுரைகளும் ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’ என்ற நூலில் உள்ள கட்டுரைகளில் சிலவும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
பயணப் பாதையின் ஓரத்தில்…
தமிழ்த் தாத்தா உ.வே.சாவின் ஒட்டுமொத்த வாழ்வும் உண்மையிலேயே ஒரு பயணம்தான். அந்தப் பயணம்தான் தமிழின் தூரத்தை விஸ்தரித்தது என்று சொல்லியாக வேண்டும். அவரது பயணத்தின் பாதையில் நிழல் மரங்களாகக் குறுக்கிட்ட அனுபவங்கள்தான் இந்தப் புத்தகத் தொகுப்பை ஆக்கிரமித்திருக்கின்றன.
பங்கா இழுத்த பாவலர், லட்டு மூட்டையைச் சுமந்த ஆசுகவி என்று விதவிதமாகச் செய்யுள் இயற்றவல்ல பாவலர்கள், மருதுபாண்டியர் முதலான புரவலர்கள் என்று இந்தத் தொகுப்பு நூல் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் துடிப்பு மிக்க சித்திரத்தை நம் மனதில் வரைகிறது.
உ.வே.சா.வின் பிற உரைநடை நூல்கள்
உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் தமிழின் ஆழ அகலத்தைக் காட்டுபவை என்றால் அவர் எழுதிய உரைநடை நூல்கள் அவரது காலத்துத் தமிழ் வாழ்வின் வண்ணத்தைக் காட்டுபவை. இந்த வகையில் ‘என் சரித்திரம்’, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’, ‘நினைவு மஞ்சரி’ ஆகிய உ.வே.சா.வின் நூல்கள் மிகவும் முக்கியமானவை.
-தம்பி
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
விலை : ரூ. 100
வெளியீடு : டாக்டர் உ.வே.சாமி நாதையர் நூல் நிலையம்
எண். 2, அருண்டேல் கடற்கரைச் சாலை,
பெசன்ட் நகர், சென்னை 600090
தொலைபேசி: 044-24911697