நான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. 'மாமிசப் படைப்பு' எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன்.
அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே இறந்துபோய்விட்டார். அவர் பிறப்பால் சைவ வேளாளர். மூலக்கரைப்பட்டி பக்கத்தில் முனைஞ்சிப்பட்டிதான் அவரது சொந்த ஊர். 1890களில் ஏற்பட்ட பெரும்பஞ்ச காலத்தில் வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லாத சூழ்நிலையில் எங்கேயாவது பிழைத்துக்கொள்ளுங்கள் என்று தாத்தாவின் அப்பா தன் மகன்களைத் துரத்திவிட்டுவிட்டார்.
எங்கள் தாத்தா கால்நடையாக நாங்குநேரி, வள்ளியூர், ஆரல்வாய்மொழி வழியாக வீரநாராயண மங்கலத்தில் உள்ள பாலத்தில் பசியும் களைப்பும் சேரப் படுத்துக் கிடந்திருக்கிறார். அந்த ஊரின் பண்ணையார் ஒருவர் அவரைப் பார்த்து, வீட்டுக்குக் கூப்பிட்டுப் போய் கஞ்சி கொடுத்து மாடு மேய்க்கும் வேலையையும் கொடுத்திருக்கிறார். நெல் வேலைகளையும் பார்த்துள்ளார்.
தாத்தா மீண்டும் தன் சொந்த ஊரான முனைஞ்சிப்பட்டிக்கு வந்திருந்தபோது, அத்தை மகளைக் கல்யாணம் செய்துகொண்டார். அவர் இரண்டு மகன்களைப் பெற்றுவிட்டு இறந்துபோனார். அந்த இரண்டு மகன்களில் ஒருவர் என்.எஸ்.நாராயண பிள்ளை. இவர் சினிமா நடிகர். கிட்டத்தட்ட 66 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்.
முதல் மனைவி இறந்துபோக, தாத்தா இரண்டாவதாக நாகர்கோவிலில் பறக்கை என்னும் இடத்தில் மருமக்கள் வழி வேளாளர் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அவர் பெயர் வள்ளியம்மை. அவர்தான் என் தந்தைவழிப் பாட்டி. அவருக்கு இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள். அவரது மூத்த மகன்தான் எனது அப்பா கணபதியா பிள்ளை.
சுப்பிரமணிய பிள்ளை, தனது எஜமானரான பண்ணையார் மூலமாக ஜோதிடம் கற்று, பனையோலையில் ஜாதகம் எழுதிப் புகழ்பெற்ற ஜோதிடராகத் திகழ்ந்திருக்கிறார். வீரநாராயணமங்கலத்தில் உள்ள தனது வீட்டின் திண்ணையில் இருந்து கம்பராமாயணம் படித்து முப்பது நாற்பது பேர் கேட்டிருக்கிறார்களாம். அவருக்குச் சொந்தமாக நிலம் கிடையாது. ஆனால் 'கூர்வடி'யாக இருந்திருக்கிறார். விவசாயக் கூலிகளுக்குத் தலைவரைக் கூர்வடி என்று சொல்லும் வழக்கம் உண்டு.
எங்கள் ஊர் முத்தாரம்மன் கோவிலில் கொடை நடக்கும்போது, வில்லுப்பாட்டுக் குழுவினருக்கு முத்தாரம்மனின் வரலாற்றை எனது தாத்தா சொல்லிக் கொடுத்திருக்கிறார். கூலிகளுக்குப் பங்கு வைக்கமுடியாமல் உபரியாக இருக்கும் நெல்லைச் சேர்த்து விற்ற பணத்தில் கட்டப்பட்ட கோவில் அது. கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் எங்கள் தாத்தாவைக் கத்தியால் குத்திவிட்டனர். நாவலில் வரும் கந்தையா பிள்ளைக்கும் அதேபோல தாக்குதல் நடக்கும். அவர் இறந்தாரா, பிழைத்தாரா என்பது நாவலில் சொல்லப்படாமல் விடப்பட்டிருக்கும். ஆனால் தாத்தா கத்தியால் குத்தப்பட்ட பிறகு காப்பாற்றப்பட்டார்.
என் அப்பா மூலம் கேள்விப்பட்ட கதையைத்தான் 1981-ல் நாவலாக எழுதினேன். அதுதான் மாமிசப் படைப்பு. சுப்பிரமணிய பிள்ளையை கந்தையாவாக மாற்றி எழுதினேன்.