அச்சிதழ்களைப் பொறுத்தவரை விரிவான கட்டுரைகளை வெளியி டுவதில் இட நெருக்கடி எப்போதும் சிக்கலை ஏற்படுத்தும். இணையத்தில் அந்தப் பிரச்சினை இல்லை. இடவசதி இருக்கிறதே என்பதால் எதையும் ஏற்றிவிடும் போக்கில் செயல்படாத மிகச் சில இணைய இதழ்களில் ஒன்று சொல்வனம்.
சொல்வனத்தின் 132-வது இதழ் அண்மையில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வெ.சுரேஷ் எழுதியுள்ள அஞ்சலி விஸ்வநாதனின் பங்களிப்பையும் அதற்கான எதிர்வினைகளின் தன்மையையும் வரலாற்றின் வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறது. அரசியலின் அதிர்வுகள் பொதுமனத்தையும் இசைச் சூழலையும் பாதித்த விதம் பற்றிய நுட்பமான அவதானிப்புகளை இக்கட்டுரையில் காண முடிகிறது.
இலக்கியம், திரைப்படம், அறிவியல், இசை, கலை, அரசியல், நூல் விமர்சனம் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகள் ‘சொல்வனம்’ இதழில் இடம்பெற்றுள்ளன. தி. ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோருக்கான சிறப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளது. அசோகமித்திரன் சிறப்பிதழில் வெளியான அவரது விரிவான நேர்காணல் அவரது ஆளுமையையும் படைப்புப் பார்வையையும் உணர்ந்துகொள்ள உதவும் முக்கியமான பதிவு. ‘கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!’ என்ற அறிவிப்புடன் வெளியாகும் சொல்வனம் அவற்றில் ஒன்று.
இணையதள முகவரி >http://solvanam.com