பன்முக ஆளுமைக்கு ஒரு விருது
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், இசைக் கலைஞர், திரைப்பட நடிகர் என்று பன்முக ஆளுமையான ரவிசுப்பிரமணியனுக்கு முதலாவது ஆனந்தாஸ் எம்.பி.ராதாகிருஷ்ணன் கலை இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் ஆனந்தி தனது தம்பி ராதாகிருஷ்ணனின் நினைவாக, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 1 அன்று ஆண்டுதோறும் இவ்விருதை வழங்கவுள்ளார். கலை இலக்கியத் துறைகளில் மிக அரிதான பங்களிப்புகளைச் செய்துவரும் பன்முக ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. ரவிசுப்பிரமணியன் இயல்பான தேர்வு என்கிறது விருது அறிவிப்புக் குறிப்பு. முதலாவது விருதளிப்பு விழா, வருகிற செப்டம்பர் 1 அன்று ராஜபாளையம் பி.எஸ்.கே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தொடரட்டும் இலக்கிய சினிமா
மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ புத்தகத்தை மையமாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’, ரசிகர்களால் கொண்டாடப்பட்டதோடு, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. தொடர்ந்து பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் திரைப்படமாக்கிவருகிறார் வெற்றிமாறன். அவரது தயாரிப்பில் மணிமாறன் இயக்கியிருக்கும் ‘சங்கத்தலைவன்’ திரைப்படமும் ஒரு நாவலைத் தழுவியதுதான். இரா.பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்...’ நாவல்தான் ‘சங்கத்தலைவன்’. தமிழில் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையில் தொடங்கியிருக்கும் இந்த கலைப் பரிமாற்றம் தொடரட்டும்!
அலைந்துழல்வு வாழ்வின் இலக்கிய சாட்சியங்கள்
போர்ப் பின்னணியில் மாறிப்போன தமிழர்களின் வாழ்வையும், அவர்களின் அந்நியப்பட்ட இருப்பையும் சித்தரிக்கும் சிறந்த நாவல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ‘காக்கைச் சிறகினிலே’ இலக்கிய இதழ். சிறந்த நாவலுக்கு ரூ.25,000 பரிசும், ஐந்து நாவல்களுக்குப் பாராட்டுப் பத்திரங்களும் அளிக்கப்படும். 2009 தொடங்கி 2019 வரையிலான கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த சிறந்த நாவல்களின் பட்டியலை வாசகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பரிந்துரைக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா.