கிருஷ்ணமூர்த்தி
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலையும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். நெருக்கடிகளையெல்லாம் கடந்து, மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது. உடல் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், மாந்திரீகச் செயல்களை முன்வைத்து நிகழ்த்தப்படும் அதிகார வேட்கை, நம்பிக்கைகளின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் என்று பல நுட்பமான கதைகளைத் தனித்துவமான பார்வையில் முன்வைத்திருக்கிறார்.
மா.சண்முகசிவா சிறுகதைகள்
தொகுப்பு: ம.நவீன்
வல்லினம் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 90424 61472
மானா பாஸ்கரன்
வடசென்னை மக்களின் வாழ்க்கையை ஆழமாக ‘நான்காம் சுவர்’ புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார் பாக்கியம் சங்கர். ‘நல்ல குணாம்சம் கொண்டவர்கள் மட்டும்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்களா அல்லது நல்ல குணாம்சங்களுடன் மட்டும்தான் நாம் வாழ்கிறோமா என்ன?’ என்கிற கேள்விகளை இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. ‘இளைய ராகங்கள்’ கட்டுரையில், ஒரு வேனில் ஒலிபெருக்கி சகிதம் அமர்ந்துகொண்டு பாடும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. ‘மழுங்கிய விரலில் எவர்சிலவர் தூக்குச் சட்டியை மாட்டியிருப்பார்கள்’ என்று தொழுநோயாளிகளைப் பற்றிய வார்த்தைச் சித்திரம் தீட்டும்போது சொற்களைக் கடந்த வாழ்வின் நிழல் நம் மனசுக்குள் படர்வதை உணர முடிகிறது.
நான்காம் சுவர்
பாக்யம் சங்கர்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை-42.
விலை: ரூ.375
தொடர்புக்கு: 90424 61472
சுப்பிரமணி இரமேஷ்
அழகிய பெரியவனின் இரண்டாவது நாவலான ‘வல்லிசை’, பறையொழிப்பின் தேவையை முன்னெடுக்கிறது. சாதிய அடையாளத்துடனே பார்க்கப்படும் பறை இசைக் கருவியானது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிறது. அதனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கண்ணியைப் பிடித்துக்கொண்டு இந்நாவல் முன்னேறுகிறது. பறையுடன் தொடர்புடைய ஒரு சமூகத்தின் கசப்பான வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தலித்துகளுக்காகப் போராடிய அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட பல தலைவர்களின் செயல்பாடுகளும் கதையுடன் பயணிக்கின்றன. திருவேங்கடம் என்ற கதாபாத்திரம் இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ள சாதியப் படிநிலைகளைத் தகர்க்கப் போராடுவதுதான் நாவலின் மையம்.
வல்லிசை
அழகிய பெரியவன்
நற்றிணை பதிப்பகம்
வடபழனி, சென்னை-26.
விலை: ரூ.240
தொடர்புக்கு: 94861 77208
ராஜகோபால்
பதினான்காம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் இயற்றியதாகக் கணிக்கப்படும் காவியமான கந்தபுராணத்தின் மூலமும் உரையும் கொண்ட நூல் வரிசையின் முதல் பகுதி இது. கந்தனாகிய முருகனின் வீரதீரச் செயல்களைச் சொல்லும் கந்தபுராணம் 91 படலங்கள், 10 ஆயிரத்து 345 பாடல்களைக் கொண்டதாகும். ‘எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே உள’ என்னும் பழமொழியால் சிறப்புப் பெற்றது ‘கந்தபுராணம்’. கச்சியப்ப சிவாச்சாரியார் வரலாறு, கந்தபுராணம் அரங்கேற்றத் தகவல்களோடு தரமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 பக்கங்கள்.
கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம்
மூலமும் உரையும் - பகுதி 1
உரையாசிரியர்:
சிவ.சண்முகசுந்தரம்
பாரி நிலையம்
விலை: ரூ.1,500
தொடர்புக்கு: 044-25270795