இலக்கியம்

தெரிந்த நாவல் - தெரியாத செய்தி | அதுக்கு பிறகு என்று பெயர் வைத்தான்

பூமணி

எழுத ஆரம்பித்தபோது அவனுக்குள் சுடலைப் பயல் எழுப்பியிருந்த சோக உலகந்தான் பெரிதாகச் சுழன்றுகொண்டிருந்தது. அந்தச் சோகத்தில் முங்கிய மனநிலையில் எழுதினால் அவன் உள்வாங்கி வைத்திருக்கும் அனுபவங்களை முழுசாக உணர்த்திவிட முடியுமா என்று தயக்கம். எழுதப்போகும் விஷயம் சோகத்துடன் வேறு பல பரிமாணங்களையும் கொண்டிருக்கணும் என்று நினைத்தான்.

எனவே கதைக்கு முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு உருவம் கொடுத்துப் பார்த்தான். இதுக்குள் இன்ன இன்ன இருக்கும். இன்னார் இன்னார் வருவார்கள். இத்தனை பக்கங்களில் நடமாடுவார்கள். இவ்வளவுதான் பேசுவார்கள். இப்படியெல்லாம் மனக்கணக்குப் போட்டான். மண்ணைச் சீராக்கி பரசி வாய்க்கால் கரைகட்டி பாத்திகளிட்ட நிலம் தெரிந்தது. நாவல் இப்படியிருந்தால் அனுபவங்கள் புதுசாக இல்லாமல் செதுக்கின மாதிரி ஆகிவிடுமே. அப்படி ஆகிவிடக் கூடாது. எழுதி முடித்த பிறகு கண்ணை மூடிக்கொண்டு பார்க்கும்போது கிடைப்பதுதான் உருவமாக இருக்க முடியும். ஆகவே முன்னெச்சரிக்கைத் திட்டத்தை வசதியாக மறந்துவிட்டான்.

அதுக்குப் பிறகு கட்டுத்திட்டமில்லாமல் அவன் பாட்டுக்கு எழுதினான். மேற்கொண்டு எழுத எழுத விக்கிரமாதித்தன் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த மாதிரி பல மனநிலைகளுக்குப் போய் உள் உலகத்தைத் தேட வேண்டியிருந்தது. அவனை ரொம்பப் பாதித்த அனுபவங்களில் முழுசாகக் கரைந்துவிட்டால் சமநிலை குலைந்து தடுமாறினான். அதுக்காக தூர விலகியும் நிற்க முடியவில்லை. அப்படி நின்றால் அனுபவம் கைநழுவி சேற்றுக்குள் விலாங்கைத் தேடிப் பிடிக்கிற நிலைமை. என்னேரமும் கத்திமேல் நிற்கும் சாதனைதான்.

எழுதிப் படித்தும் படித்து எழுதியும் பார்க்கும்போது அவன் சிலவற்றை உணர்ந்துகொண்டான். எழுதுகிறவனுக்கு ஒரு சமாச்சாரம் கிட்டத்தில் இருந்தாலும் பிடிபட்டும் பிடிபடாததுமாக ஒளிந்தும் மறைந்தும் போக்குக்காட்டுவதாக கண்டுபிடிக்கத் தூண்டுவதாக இருக்கணும். அப்போது உண்மையைத் தேடும் அவனது அக்கறையும் முயற்சியும் கூடும். இந்தத் தேடலில் தத்துவ அறிவு அவனை மேலும் திணரவைக்கணும். அதுதான் எழுத்துக்குப் பயன்படுகிற, எழுத்தை வலுப்படுத்துகிற அறிவு.

மனுசர்களை அந்தரத்தில் லாந்தவிடாமல் அவரவர் களத்திலும் சூழலிலும் கால்பதித்து நடக்கவைப்பது முக்கியமாகப் பட்டது. மண்ணுடனும் புல்லுடனும் அவர்கள் கண்ணுக்குள் இறங்கும்போது நிஜ மனுசர்களாக இருப்பார்கள். எனவே அவர்களின் அகச்சூழலுக்கு இசைவான புறச்சூழலையும் சித்தரிக்க விரும்பினான். அகநிலைகளைப் பேச்சுகளாலும் எண்ணங்களாலும் வெளிப்படுத்துவதுடன் புறநிலைகளாலும் வெளிப் படுத்தினால் உணர்வுகள் மேலும் ஆழப்படும் எனத் தெரிந்துகொண்டான். இரு நிலைகளும் ஒட்டுமாஞ்செடியாக ஒண்ணுக்கொண்ணு இணைந்து எழுத்தில் வளரும்போது அனுபவம் சிதையாமல் ஒருமுகப்பட்டுக் கிடந்தது.

கிழத் தம்பதிகளின் களக்கருதடிப்பு என்னேரமும் மனசுக்குள் தாளமிட அவன் கந்தையாவுடன் எரிந்தான். முத்துமாரியுடன் மிதந்தான். அழகிரியுடன் அலைந்தான். ஆவடையுடன் அழுதான். ஒருவழியாக கருப்பனுடன் பாடிக்கொண்டே வெளியே வந்து பெருமூச்சுவிட்டான். எப்படியோ நாவல் முடிந்துவிட்டதில் நிம்மதி. ரொம்ப நாள் தேடி அதுக்கு ‘பிறகு’ என்று பேர்வைத்தான்.

(பூமணியின் ‘ஏலேய்’ கட்டுரைத் தொகுப்பிலிருந்து ‘பிறகு’ நாவல் குறித்து எழுதிய ‘அதாகப்பட்டது’ என்ற கட்டுரையிலிருந்து)

SCROLL FOR NEXT