எஸ்.கோவிந்தராஜ்
ஈரோடு புத்தகத் திருவிழா வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மாநிலம் தழுவியதாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் உட்பட 8 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை புத்தகக்காட்சிக்கு நிகராக ஈரோடு புத்தகக்காட்சியிலும் புதிய புத்தகங்களைப் பதிப்பாளர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் எல்லைகள் மென்மேலும் விரியட்டும்.
வரவேற்கிறது வாசிப்புலகம்
புத்தகத் திருவிழாவுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. இலக்கியவாதிகள், ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்களுக்கு மட்டுமானது அல்ல இந்தப் புத்தகத் திருவிழா. வாசிப்பு வாடை கொஞ்சமும் அறியாதவர்கள்கூட வர வேண்டும் என்றும், அதன் மூலம் ஒரே ஒரு புதிய வாசகரை உருவாக்க முடிந்தால் அதுவே பெரிய வெற்றி எனும் எண்ணத்தில் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
எதுவரை நடக்கிறது?
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழா, ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருக்கிறது. இம்முறை 12 நாட்கள்! நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். 10% கழிவில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். நூலகங்களுக்கென மொத்தமாகப் புத்தகம் வாங்குவோருக்குக் கூடுதல் கழிவு உண்டு.
நிகழ்ச்சிகள்
ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் புத்தக அரங்கையும், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் படைப்பரங்கையும் திறந்துவைத்தனர். விழாவில், தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
விருதுகள்
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் இளம் விஞ்ஞானிக்கான ஜி.டி.நாயுடு விருது வழங்கும் விழாவும், தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் ஓய்.சுப்பராயலு, கே.ராஜன், செ.இராசு ஆகியோருக்கான பாராட்டு நிகழ்வும் குறிப்பிடத்தக்கவை.
‘இந்து தமிழ்’ அரங்கு: 188
ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘இந்து தமிழ்’ அரங்கு (188) வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது. வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, கருணாநிதியின் வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ ஆகிய நூல்கள் கிடைக்கும். சுப்பையா பாண்டியனின் ‘அறிவியல் ஆயிரம்’, ந.வினோத் குமாரின் ‘வான் மண் பெண்’, பாமயனின் ‘முன்னத்தி ஏர்’ போன்ற புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எப்போது வெளிவரும் என்று போட்டித் தேர்வாளர்கள் ஆர்வமுடன் காத்திருந்த ‘பொது அறிவு - 2019’ நூலையும் இங்கே வாங்கிக்கொள்ளலாம். இதேபோல், ‘தி இந்து’ ஆங்கிலப் பதிப்புகளெல்லாம் அரங்கு எண் 27-ல் கிடைக்கும். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
புத்தகக்காட்சியின் சிறப்பம்சங்கள்
மயக்கும் மாலை நேரம்
ஈரோடு புத்தகத் திருவிழாவின் தனிச் சிறப்புகளுள் ஒன்று மாலை நேரச் சொற்பொழிவுகள். இதற்காகவே ஆயிரக்கணக்கில் வாசகர்கள் குவிவது வழக்கம். இந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஒடிசா மாநில தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ‘இந்து தமிழ்’ ஆசிரியர் கே.அசோகன், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால், ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன், திரைக் கலைஞர்கள் சிவகுமார், பொன்வண்ணன், ரோகிணி என பல்துறை பிரபலங்கள் சொற்பொழிவு மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.
படைப்பாளர் மேடை
தினமும் காலை 11 முதல் 1.30 வரையிலும், மதியம் 2 முதல் 4.30 வரையிலும் தனி அரங்கத்தில் நூல் வெளியீட்டு விழாக்கள் நடக்கவுள்ளன. ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கென பிரத்யேகமாக 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்படவுள்ளன. சிறந்த படைப்பாளிகள் பங்கேற்கும் படைப்பாளர் மேடை நிகழ்ச்சியில், வாசகர்களும் படைப்பாளிகளும் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முக்கியத்துவம்
ரூ.250-க்கு நூல்களை வாங்கும் மாணவர்களுக்கு நூல் ஆர்வலர் சான்றிதழ், புத்தங்களை வாங்க சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த ரூ.5-க்கு உண்டியல் வழங்குதல் போன்றவற்றோடு, தேர்ச்சி பெற்ற கதைசொல்லிகளை வைத்துக் கதை சொல்லவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
15 பெண் ஆளுமைகள்
ஈரோடு புத்தகத் திருவிழாவின் 15-ம் ஆண்டையொட்டி ஆகஸ்ட் 8 மகளிர் எழுச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஈரோட்டைச் சேர்ந்த 15 பெண் ஆளுமைகள் கெளரவிக்கப்படவுள்ளனர். பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில், பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள், பாரதி, பெரியார், விவேகானந்தர் உள்ளிட்டோரின் பெண்ணியச் சிந்தனைகளைத் தாங்கிய புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பாரதி யார்?
ஈரோடு புத்தகத் திருவிழாவில் இதுவரை நாடகம் நடைபெற்றது இல்லை. அந்தக் குறை இம்முறை போக்கப்படுகிறது. ஆகஸ்ட் 10 அன்று ‘பாரதி யார்?’ என்ற தலைப்பில் பாரதியின் வாழ்க்கையைச் சொல்லும் இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடக்கிறது. நடிகர் சிவகுமார் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக
மாற்றுத்திறனாளிகளும் முதியோர்களும் தன்னார்வலர்களை அணுகினால் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்துதரப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் அவர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தாலும் அவரைச் சக்கர நாற்காலியில் அழைத்துச்சென்று அரங்குகளைக் காட்டும் வகையில் தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சுத்தம் சுகாதாரம்
அரங்குகளில் காற்றோட்டமான வசதி, நியாய விலையில் உணவு, ஏடிஎம் வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் போன்ற வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. வாசகர்கள் வழக்கமாக வைக்கும் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்தித்தர ஈரோடு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரே நேரத்தில் ஐந்து புத்தகக்காட்சிகள்!
ஈரோட்டில் புத்தகக்காட்சி நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் தருமபுரி, உடுமலைப்பேட்டை, வடசென்னை, மன்னார்குடியில் புத்தகக்காட்சிகள் தொடங்கியுள்ளன. தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் ஜூலை 26 தொடங்கிய புத்தகக்காட்சி ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. உடுமலை தளி ரோட்டிலுள்ள தேஜஸ் மஹாலில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கும் புத்தகக்காட்சி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. வடசென்னை தங்கம் மாளிகையில் (சுங்கச்சாவடி அருகில்) ஆகஸ்ட் 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. மன்னார்குடி ஏகேஎஸ் திருமண மஹாலில் ஆகஸ்ட் 9 தொடங்கும் புத்தகக்காட்சி ஆகஸ்ட் 19 வரை நடைபெறுகிறது.
சமூக மாற்றத்துக்கு விதை தூவும் திருவிழா!
ஈரோட்டில் 75 அரங்குகளோடு தொடங்கிய புத்தகத் திருவிழாவை 230 அரங்குகளாக விரிவாக்கி, மாநிலம் தழுவிய வாசிப்பு இயக்கத்தை வளப்படுத்திவருகிறது ‘மக்கள் சிந்தனைப் பேரவை’. பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனின் முன்னெடுப்புகள் மெச்சத்தக்கவை. ஈரோடு புத்தகத் திருவிழாவின் பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
“சமூகம் மீது அக்கறை கொண்டவர்களை ஒன்றிணைத்து, அவர்கள் மூலம் சமூகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கும் ஒரு அமைப்புதான் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’. அதில் முதன்மையானதாக ஈரோடு புத்தகக் காட்சியைப் பார்க்கிறேன். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஐந்தாம் ஆண்டைத் தொட்டபோது, மேலும் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டோம். அவ்வகையில், மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற அப்துல்கலாமை அழைத்து ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ எனும் தலைப்பில் பேசவைத்தோம். ஒரு லட்சம் பேர் தன்னெழுச்சியாகத் திரண்டார்கள். 10-ம் ஆண்டு திருவிழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவும், நிறைவுநாளில் அப்துல்கலாமும் பங்கேற்றது பெருமைக்குரிய நிகழ்வு. ஈரோடு புத்தகத் திருவிழாவை வெறும் புத்தக வணிக மையமாக நான் கருதவில்லை. புத்தகங்கள் சமூகத்தை மாற்றியமைக்கும். சமூக மாற்றத்துக்கு விதை தூவும் திருவிழாதான் இது.
இங்கே புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கிய பிறகு உலகம் முழுவதும் பல புத்தகத் திருவிழாக்களைப் பார்க்கச் செல்லும் ஆர்வம் மேலும் அதிகமாகியிருக்கிறது. அங்கே காணும் அதிசயங்களை ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு எப்போது கொண்டுவருவோம் என்று ஏங்குவேன். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக இங்கே அறிமுகப்படுத்துவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்!”