தீவிர இலக்கிய வாசகர்களுக்கு கோவை என்றவுடன் ஞானி தொடங்கி விஜயா வேலாயுதம், புவியரசு, நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வரைக்கும் ஞாபகம் வரக்கூடும். என்னைப் போன்று ஆரம்ப நிலை வாசிப்பிலிருந்து தீவிர வாசிப்பின் பக்கமாக நகர்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கோவை என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் ராஜேஷ்குமார்தான். ‘க்ரைம் நாவல்’ மாத இதழில் ‘கோயம்புத்தூரிலிருந்து ட்ரங்கால்’ என்ற தலைப்பில் ராஜேஷ்குமார் மாதம்தோறும் எழுதிவரும் கடிதங்களின் விளைவு இது.
ராஜேஷ்குமார் தனது எழுத்துப் பயணத்தில் 50-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறார். இதுவரையில் 1,500-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் 2,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் ராஜேஷ்குமார். ஐம்பதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் ராஜேஷ்குமாரின் எழுத்துகள் இன்னமும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டுவருகின்றன. அதற்கான காரணம், அவரது எளிமையும் சரளமும் கொண்ட எழுத்து நடை மட்டுமல்ல, காலத்துக்கேற்ப அவரது கதையுலகமும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான்.
நவீன அறிவியலின் மோசடி
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றச் சம்பவங்களின் காரணங்கள் மாறிவிட்டன. பணம், பதவி, பெண் ஆசைகள்தான் குற்றச் செயல்களுக்கான காரணம் என்ற அடிப்படை விதியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்றைய குற்றச் சம்பவங்களுக்கான காரணம் பெரும்பாலும் நவீன அறிவியலின் மோசடியாகவே இருக்கிறது. ராஜேஷ்குமார் கையிலெடுக்கும் புள்ளி பெரும்பாலும் அதுவாகவே இருக்கிறது. அறிவியல் படித்தவர் என்பதால், அதுசார்ந்த நுட்பமான விவரங்களையும் தனது கதைகளில் சேர்த்துக்கொள்கிறார் ராஜேஷ்குமார். அதனால், படிக்கும் அனுபவத்தைத் தாண்டி, நவீன அறிவியல் பற்றிய அறிமுகமாகவும் அவரது கதைகள் அமைந்துவிடுகின்றன.
சமீபத்தில் வெளியான ராஜேஷ்குமாரின் நாவல் ‘விவேக், விஷ்ணு, கொஞ்சம் விபரீதம்’ நாவல், நாசகாரச் சக்திகள் அணு அறிவியலைத் தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்கும் நாவல். ‘மினியேச்சர் நியூக்ளியர் ப்ளான்ட்’ எனப்படும் சாதனத்தை நிறுவி வளமான பூமியைப் பாலைவனமாக்கும் கொலைபாதக முயற்சியை அது விவரிக்கிறது. அணு உலைகளின் அபாயங்களை அறிவியல்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.
புதிய தொழில்நுட்பங்கள், அவற்றுக்கான உலகளாவிய சந்தை, அதற்காக நடக்கும் போட்டிகள், பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை முகம் என்று உலகமயமாதல் காலகட்டத்தின் ஈவிரக்கமற்ற வணிகப்போக்கே பெருங்குற்றங்களின் காரணம் என்பதுதான் இன்று ராஜேஷ்குமார் எழுதிவரும் கதைகளின் முக்கிய மையம். உள்ளீடற்ற எழுத்து, பொழுதுபோக்கு எழுத்து, வணிக எழுத்து என்றெல்லாம் விமர்சிக்கப்படும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கான எழுத்தில் இவ்வளவு அடர்த்தியான விஷயங்களை நெகிழ்வான ஒரு கதையாடலில் பேச முடிகிறது என்பது ஆச்சரியம்.
ராஜேஷ்குமார் என்ற மனிதர்
ஐம்பதாண்டு கால எழுத்து வாழ்க்கையில் ராஜேஷ்குமார் தன்னைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத்தான் எழுதியிருக்கிறார். ‘என்னை நான் சந்தித்தேன்’ என்ற அந்த நினைவுக் குறிப்புகளிலும்கூட ராஜேஷ்குமார் என்ற பிரபல எழுத்தாளரைக் காட்டிலும், தொடர்ந்து ஏமாற்றங்களையும் அவமதிப்புகளையும் சந்தித்தாலும் மனம்தளராத ராஜகோபால் என்ற இளைஞனையே அதிகம் பார்க்க முடிகிறது.
கல்லூரிப் படிப்பை முடித்து, வேலை தேடும் முயற்சியில் இறங்கும் வரை வாசிப்பின் பக்கம் வராதவர் ராஜேஷ்குமார். வார இதழ்களைப் படிக்குமாறு நண்பர் விஜயா பதிப்பகம் வேலாயுதத்தால் அந்நாட்களில் அறிவுறுத்தப்பட்ட அந்த இளைஞர், இன்று எழுதாத வார இதழ்களே இல்லை என்றாகிவிட்டது. 1979 வரைக்கும் சிறுகதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ராஜேஷ்குமார், 1980-ல் ‘மாலைமதி’யில் நாவலும், தொடர்ந்து ‘கல்கண்டு’ இதழில் தொடர்கதையும் எழுதினார். அதன் பிறகு, ஏழு வார இதழ்களில் ஒரே நேரத்தில் தொடர்கதை எழுதி சாதனை படைத்தார்.
நா.பார்த்தசாரதி, அகிலன், சிவசங்கரி ஆகியோர் சமூக நாவல்களில் புகழ்பெற்று விளங்கிய காலம் அது. க்ரைம் நாவல்களில் பிரபலமாக இருந்த தமிழ்வாணன் காலமாகிவிட்டார். அப்படியொரு காலகட்டத்தில் க்ரைம் நாவல் எழுதினால் பிரசுரமாக வாய்ப்பிருக்கிறது என்று அதன் பக்கமாக ஒதுங்கியவர் ராஜேஷ்குமார். அவரது கணிப்பு பலித்துவிட்டது. பாரதி பதிப்பகம் அவரது ஐந்து புத்தகங்களைப் பதிப்பித்தது. சென்னை ஸ்வாகத் ஹோட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர் லட்சுமி, ராஜேஷ்குமாரின் எழுத்துகளில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்துப் பேசியதோடு, அத்தகைய சித்தரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ‘தாயாக உங்களை மதிக்கிறேன். தாய்ப் பேச்சைத் தட்ட மாட்டேன்’ என்று அந்த மேடையிலேயே அறிவித்தார் ராஜேஷ்குமார். ஏறக்குறைய நாற்பதாண்டு காலமாக அந்த உறுதிமொழியை அவர் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்.
க்ரைம் நாவல் மாத இதழ்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ‘க்ரைம் நாவல்’ என்ற மாத இதழ் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு இதழிலும் அவரது நாவல் வெளிவந்தாலும் கேள்வி-பதில், கடிதங்கள், பயனுள்ள தகவல்கள் என்று இதழ் முழுவதையும் அவரே எழுதிக்கொண்டிருக்கிறார். ராஜேஷ்குமாரின் கதைகள் லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றுசேர்வதற்கு அவரது பதிப்பாளர் ஜீயே பப்ளிகேஷன்ஸ் அசோகனும் ஒரு முக்கிய காரணம். எழுத்தாளர் - பதிப்பாளர் நட்புக்கு ஒரு முன்னுதாரணமும்கூட. ‘எல்லாம் தம்பி கொடுத்த வாய்ப்பு’ என்று ராஜேஷ்குமார் அசோகனைக் கைகாட்டினால், அவரோ ‘இல்லையில்லை... அண்ணனின் ஆசிர்வாதம்’ என்று நகர்ந்துவிடுவார்.
பத்திரிகை உலகில் ராஜேஷ்குமார் பிரபலமாகிக் கொண்டிருந்த வேளையில், வட இந்தியாவில் கைத்தறித் துணிகளுக்கு ஆர்டர் கேட்க கடைகடையாய் ஏறியிறங்கிக்கொண்டிருந்தார் என்ற தகவலும் நினைவில் வருகிறது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் துணிகளை வாங்கி அவற்றை வட இந்திய நகரங்களில் விற்கும் வேலையைச் செய்தார். தினசரி அலைச்சல்களுக்குப் பிறகு, இரவில் நெடுநேரம் அவர் கண்விழித்து எழுதியவைதான் அந்தந்த வாரங்களில் இதழ்களையெல்லாம் அலங்கரித்திருக்கின்றன. எழுத்துலகில் அவருக்குக் கிடைத்த பிரபலம், அவரிடம் சினிமா கனவுகளையும் கிளர்த்திவிட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே கிடைத்த கசப்பான அனுபவங்கள், கோடம்பாக்கம் என்ற வார்த்தையைக் கேட்டால் அந்த இடத்தை விட்டே ஓடும் அளவுக்கு அவரை மாற்றிவிட்டது. எனினும், அவரது கதைகளில் சில திரைப்படமாகியிருக்கின்றன. கதைகளின் பல நூறு காட்சிகள் அவருக்குத் தெரிந்தும் தெரியாமலும் படமாகியிருக்கின்றன. அவரது சில நாவல்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் ஒளிவடிவம் கொடுத்திருக்கின்றன. இன்றைய வெப் சீரிஸ் காலத்தில் மேலும் அவரது கதைகள் படமாகக்கூடும். ஆனால், ராஜேஷ்குமாரின் பயணம் எழுத்தோடு மட்டுமே. அதுதான், அவரை ஐம்பது ஆண்டுகளாய் வாசகர்களோடு பிணைத்துவைத்திருக்கிறது.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in