கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் சிறு நகரம் செங்கன்னூர். இங்கே சர்வதேச இலக்கிய விழா ஜூலை 24 அன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறு நகரங்களிலும் கலை, பண்பாடு சார்ந்த விழாக்களை முன்னெடுப்பது அவசியம் என்ற நோக்கத்தில் இந்த விழா செங்கன்னூரில் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொள்கின்றனர். கேரள இளைஞர் நல வாரியம், நிகழ்த்து கலை மற்றும் பிற கலைகளுக்கான அமைப்பான பிஏஎம்பிஏ ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. மூன்றாவது தென்னிந்திய எழுத்தாளர் குழும இலக்கிய விழாவான இதன் முதல் இரண்டு விழாக்கள் கேரள சாகித்ய அகாடமியுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளன. இந்த விழாவில் வட கிழக்கு மாநிலங்களின் இலக்கியம் பிரதானமாக அமையும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
*
கவிஞர் ஆத்மாநாம் நினைவைக் கொண்டாடும் வகையில், மெய்ப்பொருள் பதிப்பகம், சிறந்த கவிதை நூலுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கவுள்ளது. இந்த விருதுக்கான ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கலாப்ரியா. அவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஆத்மாநாம் விருதுக்கான நூலைத் தேர்வு செய்கிறது.
ஆத்மாநாம் விருதுடன் பரிசுத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2015-ல் குற்றாலத்தில் மெய்ப்பொருள் பதிப்பகம் சார்பில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். வாசகர்களும், படைப்பாளர்களும் விருதுக்கான தொகுப்புகளைப் பரிந்துரைக்கலாம். பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: meiporulpublication@gmail.com. பரிந்துரைகள் ஜூலை 30, 2015க்குள் வந்து சேர வேண்டும்.
*
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டுச் செல்லாமல் இன்றும் இருந்திருந் தால் இந்தியா எப்படி இருக்கும்? இதுதான் அர்ஜுன் ராஜ் கெய்ண்ட் எழுதி, என்ரிக் அல்கடினா படங்கள் வரைந்து வெளியாகி யிருக்கும் ‘எம்பயர் ஆப் ப்ளட்’ கிராபிக் நாவலின் கதையாகும். மிகச் சிறுபான்மையினரே பெரும் செல்வந்தர்களாகவும், பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகவும் வகுப்பு வேற்றுமை களுடனும் திகழும் நமது இன்றைய இந்தியா வைக் கிண்டல் செய்யும் சர்ரியல் நாவல் இது என்கிறார் அர்ஜுன் ராஜ் கெய்ண்ட். காதல், புரட்சி, மோதல்கள் அனைத்தும் கலந்த கிராபிக்ஸ் நாவல் இது.
தொகுப்பு:ஷங்கர், செல்லப்பா