சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர் களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய’ விருதையும் 21 இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் வீரபாண்டியனுக்கும், பால சாகித்ய அகாடமி விருது கவிஞர் செல்ல கணபதிக்கும் தமிழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் வீரபாண்டியனின் முதல் நாவல் ‘பருக்கை', ஒரு வேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்லாமல் அரசு விடுதியில் தங்கி, பகுதி நேரமாகப் பரிசாரகனாக வேலை பார்க்கும் இளைஞர்களின் வலியைப் பதிவுசெய்கிறது. கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குப் படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்களையும் இந்த நாவல் மூலம் சொல்கிறார் வீரபாண்டியன். தமிழகத்தில் அரசு விடுதிகள் எப்படிச் செயல்படுகின்றன, அங்கு தங்கியுள்ள மாணவர்கள் என்னவிதமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பதற்கு ‘ஒரு பருக்கை’ உதாரணம் இந்த ‘பருக்கை’ நாவல். இது இவரது முதல் நாவல்.
குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, குழந்தை இலக்கியத் துறையில் வெகு காலமாகச் செயற்பட்டுவருபவர். ‘ஆருயிர்த் தோழி’, ‘சின்னச் சின்ன பாட்டு’, ‘பட்டுச் சிறகு’ உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவரது ‘தேடல் வேட்டை’ என்ற நூலுக்காக பால சாகித்திய விருது அறிக்கப்பட்டுள்ளது.