எழுத்தாளர் கோணங்கி தன் நண்பர்களுடன் இணைந்து 1989-ம் ஆண்டு ‘கல்குதிரை’ என்னும் இலக்கியச் சிற்றிதழைக் கொண்டுவந்தார். கல்குதிரைக்கு இது 25-ம் ஆண்டு. மணிக்கொடி எழுத்து, கசடதபற, மீட்சி போன்ற தீவிரமான தமிழ்ச் சிற்றிதழ் மரபில் கோணங்கியின் ‘கல்குதிரை’க்குத் தனித்துவம் உண்டு. சர்வேதேச இலக்கியங்களையும் படைப்பாளிகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்வது கல்குதிரையின் பிரதான அம்சங்களுள் ஒன்று. அதன் மூலம் தமிழ்ப் படைப்பு மொழியில் பரவலான தாக்கத்தைக் ‘கல்குதிரை’ விளைவித்தது. கல்குதிரையின் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் சிறப்பிதழை அதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
இவை மட்டுமல்லாது ஃப்யோதர் தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ், தற்கால உலகச் சிறுகதைகள் சிறப்பிதழ் போன்ற பல முக்கியமான சிறப்பிதழ்களைக் ‘கல்குதிரை’ கொண்டுவந்துள்ளது. இந்த 25-வது கல்குதிரை இதழ், இரு இதழ்களாக வெளிவந்துள்ளது. ரோமண்ட் கார்வர், ஆக்டேவியா பாஸ், ஹருக்கி முரகாமி, இடாலோ கால்வினோ, விளாதிமீர் நபக்கோவ் போன்ற பல உலக இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன
தமிழ்ப் படைப்பாளிகளின் பங்களிப்பு கட்டுரை, கவிதை, நாவல் பகுதி, சிறுகதைகள் எனப் பல தளங்களில் வெளிப்பட்டுள்ளன. ஆற்று வெள்ளம் போல இளம் படைப்பாளிகளைக் கல்குதிரை இழுத்து வந்து நம் முற்றத்தில் சேர்த்துள்ளது. திராவிடக் கட்டிடக் கலை மரபில் முன்னங்காலைத் தூக்கிப் பறக்க எத்தனிக்கும் கல்குதிரைதான், ‘கல்குதிரை’ இதழின் பெயருக்கான காரணம். “இந்த இருபத்தைந்து வருடத்தில் துகள் துகளாய் நொறுங்கிப்போன சிற்றிதழ் கனவுகளை, அகச் சூழல்களைப் படைப்பாளிகள் இந்த இதழில் மீண்டும் சலனமுற வைத்திருக்கிறார்கள்” என இந்த இதழ் பற்றிக் கோணங்கி தெரிவிக்கிறார்.
கல்லில் உறைந்திருக்கும் குதிரை என்னும் நவீனத் தமிழ் இலக்கியத்தைத் தட்டி உயிர் கொடுத்து ஓடச் செய்வதுதான் சிற்றிதழ்களின் பணி. ‘கல்குதிரை’ அதை வேகத்துடன் செய்துகொண்டிருக்கிறது.