இலக்கியம்

உயிர்ப்போடு வைத்திருக்கும் வாசிப்பு- திரைப்பட இயக்குநர் வஸந்த் சாய்

மகராசன் மோகன்

நான் உயிரோடு இருப்பதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உயிர்ப்போடு இருப்பதற்குப் புத்தகங்கள் மட்டும்தான் காரணம். புதிய புத்தகங்களைப் பார்க்கும்போது, காதலியைப் பார்க்கும் உற்சாகம் எப்போதும் எனக்கு ஏற்படும். ஜெயகாந்தன் இறந்தபோது, ‘என் அறிவில் பாதி அவர் கொடுத்தது’ என்று அவர் குடும்பத்தினரிடம் கூறினேன்.

ஷேக்ஸ்பியரின் எழுத்துகள்தான் எனக்கு ஆதர்சம். பல தருணங்களில் அவருக்கு மேல் யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. ஜெ.டி. சாலின்ஜர் எழுதிய ‘தி கேட்சர் இன் தி ரை’ புத்தகம், இளம் பருவத்தில் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் இன்றளவும் என் நினைவுத் தடத்தில் பசுமையாக இருக்கின்றன. தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றப் புத்தகங்கள் மீது எனக்கு அதீத காதல் உண்டு. ‘ஹவ் டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீப்பிள்’, ‘நோட்ஸ் டு மைசெல்ஃப்’ ஆகிய புத்தகங்கள் என் எண்ணங்களை விசாலப்படுத்தியவை.

அனுத்தமா, ரா.சு. நல்லபெருமாள், எல்.ஆர்.வி., பி.வி.ஆர்., து.ராமமூர்த்தி உள்ளிட்ட எழுத்தாளர்களைப் பள்ளி நாட்களில் படிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன், பாலகுமாரன், மாலன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவையாக அப்படைப்புகள் இருக்கின்றன. எழுத்தாளர் க.நா.சு-வின் இலக்கிய ஆளுமை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இப்படிப் புத்தகங்களிலிருந்து பிரிக்க முடியாத என்னைத் தற்போது ‘தி த்ரீ லாஸ் ஆஃப் பெர்பாமென்ஸ்’ என்ற ஆங்கில நூலும், குளச்சல் மு. யூசுப் தமிழில் மொழிபெயர்த்த ‘திருடன் மணியன் பிள்ளை’(மலையாளத்தில்: ஜி.ஆர். இந்துகோபன் எழுதியது) என்ற நூலும் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

SCROLL FOR NEXT