இலக்கியம்

கொற்கைக்கு எதிராக வழக்கு

செய்திப்பிரிவு

எழுத்தாளர் ஜோ டி குரூஸுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது ‘கொற்கை’ நாவல், கிறித்துவத்தையும் போதகர்களையும், குறிப்பாகக் கன்னியாஸ்திரிகளையும் தவறாகச் சித்தரிக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. தூத்துக்குடி மீன விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலங்கார பரதவர்தான் இதை முன்னெடுத்திருக்கிறார்.

வரலாற்று ஆதாரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கொற்கை’ பரதவ சமூகம் சந்தித்த மாற்றங்களைச் சித்திரிக் கிறது. கிறித்துவ மதம் அந்தச் சமூகத்தில் பரவி வேரூன்றுவதும் நாவலினூடே பதிவுசெய்யப்படுகிறது. இவையே சர்ச்சைக் குள்ளான பகுதிகளாகப் பார்க்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. “என்னுடைய நாவல் மூலம் இங்கு இருக்கும் மத அடிப்படைவாதிகள் சிலரின் வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் பதற்றத்துக்கு உள்ளாகி றார்கள். நான் சமூகத்துக்கு எதிராக எப்போதும் செயல்படவில்லை” என்கிறார் ஜோ டி குரூஸ்.

இவ்வழக்கு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை எனத் தமிழ் அறிவுச் சமூகம் குரூஸுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளது. கல்வியாளர் வசந்திதேவி, ஆவணப்பட இயக்குநர் ஆனந்த்பட்வர்தன், பேராசிரியர் வீ. அரசு, கர்நாடக இசைப் பாடகரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி, எழுத்தாளர் வ.கீதா ஆகியோர் ஆகியோர் இணைந்து கையெழுத்துட்ட அறிக்கை, ‘இம்மாதிரியான வழக்குகள் சுயவிளம்பரத்திற்காகப் போடப்படுவை' எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான வழக்குக்கு பயந்து தான் முடங்கிப்போய்விட மாட்டேன் என்னும் குரூஸ், “சுயநலன் கருதி சிலர்தான் என் எழுத்துக்கு எதிராகப் பிரச்சினையைக் கிளப்புகிறார்களே தவிர, சமூகம் என்னுடன்தான் இருக்கிறது. நான் சமூகத்துடன் இருக்கிறேன்” என உறுதிகொள்கிறார்.

SCROLL FOR NEXT