தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, எடிட்டிங், மொழியியல், அகராதியியலில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது.
நாவல், சிறுகதை, கவிதை என எந்த நூலாக இருப்பினும் உள்ளடக்கத்திற்கும் அட்டை வடிவமைப்பு, அழகியலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வெறும் சரக்குகளாகப் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது. எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தங்கள் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிடும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. இச்சூழ்நிலையில் தரமான வெளியீடு என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையே இருந்தது. இப்பின்னணியில் 1974-ல் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் சார்ந்த சமகால படைப்புகளை வெளியிடுவதன் மூலம் கால்பதித்தனர் க்ரியா பதிப்பகத்தினர். இதன் பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், தாம் வெளியிடும் புத்தகங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றினார்.
தமிழில் புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பின்னணியில் முக்கியமான கவிக்குரல்களாக உருவான சி.மணி, பசுவய்யா (சுந்தர ராமசாமி), நாரணோ ஜெயராமன் போன்றவர்களது முதல் கவிதைத் தொகுதிகள் இன்றும் க்ரியாவின் ஆத்மார்த்தத்திற்குச் சான்றாக இருப்பவை.
பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்றவை தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களின் எளிய மருத்துவப் பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணும் விதமாக எழுதப்பட்ட டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலை எளிமையாக மொழிபெயர்த்து பதிப்பித்தது பெரிய சேவை.
உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் எனப் பல துறைகள் சார்ந்து க்ரியா பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளின் பின்னணியில் ஏற்பட்ட மொழி அனுபவம் வழியாகத் தற்காலத் தமிழ் அகராதியின் தேவையை உணர்ந்து க்ரியா- தற்காலத் தமிழ் அகராதியை பல ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 1992-ல் வெளியிட்டது. தொடர்ந்து அந்த அகராதியை புதிய சொற்களுடன் புதுப்பித்தும் வருகிறார்கள். க்ரியாவின் இணையதளத்தில் சொல்வங்கி ஒன்றையும் உருவாக்கி 35 லட்சம் வரை சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும் மொழிசார்ந்து மேம்படுத்த ஒரு எடிட்டர் தேவை என்பதைத் தமிழ்ப் பதிப்புத் தொழிலில் உணர்த்தியவர்கள் க்ரியா பதிப்பகத்தினர். ஒரு புத்தகம் என்பது உள்ளும், புறமும் அழகான ஒரு உயிர் என்ற அந்தஸ்தை அளித்த பெருமை க்ரியாவுக்கு உண்டு.
க்ரியா ராமகிருஷ்ணன்
நாற்பது ஆண்டுகளில் க்ரியாவின் பதிப்புப் பணிகள் அச்சுத் துறையில் நிகழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடனேயே பிணைந்து வளர்ந்திருக்கின்றன. மிகுந்த கவனத்துடன் தேர்ந் தெடுக்கப்பட்ட புத்தகங்களே வெளியிடப்பட்டிருக்கின்றன. அனுபவத்திலிருந்து பெற்ற பார்வையே உள்ளடக்கத்தையும் புத்தக ஆக்கத் தையும் தீர்மானித்திருக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் க்ரியாவின் செயல்பாடு இணையத்தை அடித்தளமாகக் கொண்டே விரிவடை யும். குறிப்பாக, க்ரியா அகராதி இணையத்தில் புதிய வடிவைப் பெற்று, புதிய மொழிக்கருவி நூல்களுக்கு வழிசெய்து தரும். நல்ல புத்தகங்களைக் கவனத்துடன் நல்ல முறையில் வெளியிடுவது பெரும் மகிழ்ச்சி தரும் வேலை. க்ரியாவின் வெளியீடுகள் தலைமுறைகளைத் தாண்டி நிற்க வேண்டும் என்பது என் விருப்பம். இதற்கு எவ்வளவு உழைத்தாலும் போதாது. ஆனால் புத்தகம் என்பது எழுத்தாளரும் பதிப்பாளரும் மட்டும் உருவாக்குவது இல்லையே!