நாஞ்சில் நாடன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். சாகித்திய அகாடமி விருது, இயல் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இவரது நாவலான 'தலைகீழ் விகிதங்கள்', 'சொல்ல மறந்த கதை' என்னும் பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஆனந்த விகடன், குங்குமம் போன்ற முன்னணி இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருபவர். புனைவு மட்டுமல்லாது கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். 'நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை'அவற்றுள் முக்கியமான ஒன்று. இப்போது நாஞ்சில் நாட்டு உணவு குறித்த கட்டுரை நூலைக் கொண்டுவர உள்ளார். 400 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நூல் அவரது பல்லாண்டுகால உழைப்பு. உணவுக் குறிப்பாக அல்லாமல் கலாச்சாரப் பின்னணியுடன் இந்த நூலை அவர் தரவுள்ளார்.
மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா எழுதிப் பெரும் கவனம் பெற்ற 'ஆரச்சார்' நாவலின் 50 ஆயிரமாவது பிரதி ஏலத்திற்கு விடப்பட்டது. துபாயைச் சேர்ந்த கலாச்சாரச் செயற்பாட்டாளர் பஷீர் ஷம்மத் இந்தப் பிரதியை 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இந்தியாவின் முதலாவது பெண் தூக்கிலிடுபவரை மையப் பாத்திரமாகக் கொண்டது 'ஆரச்சார்' நாவல். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கவனம் பெற்றது. இந்த 50 ஆயிரமாவது பிரதி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்திலும் தொடக்கத்தில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் நூலாசிரியரின் கையெழுத்தில் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அட்டையை ஓவியர் ரியாஸ் கோமு வடிவமைத்துள்ளார். இந்தத் தொகை, மனவளர்ச்சி குன்றியோருக்கான கவிஞர் சுகதகுமாரியின் தொண்டு நிறுவனமான 'அபயா'வுக்கு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் தலைசிறந்த ஐம்பது எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் ஹனிஃப் குரியேஷி. 'தி ப்ளாக் ஆல்பம்' உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களையும் நாடகங்களையும் திரைக்கதைகளையும் எழுதியுள்ள அவரது படைப்பான 'லவ் ப்ளஸ் ஹேட்: ஸ்டோரிஸ் அண்ட் எஸ்ஸேஸ்' சமீபத்தில் வெளியாகி பலத்தை வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படைப்பின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாயை அவருடைய தனிக் கணக்காளரான ஆதம் உரிக்கர் என்பவர் சூறையாடிச் சென்றுவிட்டார். குழந்தைகளின் கல்விச் செலவுக்கான மொத்தப் பணமும் கையை விட்டு அகன்ற நெருக்கடியான சூழலில் தகித்த மூளையில் உதித்த எண்ண அலைகள் காரணமாக எழுதப்பட்டதே இந்தப் படைப்பு என்கிறார் இவர்.
தொகுப்பு:ஜெய், ரிஷி