இலக்கியம்

ரத்தினக் கற்கள் தேடும் நீலகண்டப் பறவை

இரா.காமராசு

நாகரிகச் சமூகங்கள் தங்கள் வேரைத் தேடுகின்றன. அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றன. வரலாற்றில் புதையுண்ட தங்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்துக் கரிசனம் கொள்கின்றன. சிலம்பு தமிழின் தொன்மை அடையாளம், கண்ணகியும்தான். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கப் பரல்கள் பண்டைத் தமிழகத்தின் ஒப்பற்ற விளைச்சல், பெரு வணிகப் பண்டம். மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்றெல்லாம் ரத்தினக் கற்கள் சுட்டப்படுகின்றன. இவை புறநானூறு போன்ற செவ்விலக்கியங்களில் ‘மிளிர மணிகள்’ எனப்படுகின்றன. இதைக் குறியீடாக்கி ‘மிளிர் கல்’என்னும் நாவலை இரா. முருகவேள் படைத்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைச் சிறப்பில் ஈடுபாடு கொண்ட இளம்பெண் முல்லை. இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதழியல் கல்வி கற்கிறார். கண்ணகிமீது கொண்ட பேரன்பால் கண்ணகி தொடர்பான ஆவணப்படம் எடுக்க முனைகிறார். அவரது பல்கலைக்கழகத் தோழர் நவீன் ஒளிப்பதிவாளராக உதவுகிறார். தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் குமார், மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரும் இப்பயணத்தில் இணைகின்றனர். இந்தப் பயணமே நாவலாக விரிந்துள்ளது.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் கண் முன் காட்சியாகிறது. சிலப்பதிகாரக் காலத்தின் தமிழக வரலாறும் அதன் தொடர்ச்சியும் நாவலின் ஊடே விவரிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் நாவலை வேறு தளத்திலும் ஆசிரியர் நகர்த்துகிறார்.

கொங்கு நாட்டில் கரூரிலும் காங்கேயத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பச்சை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களில் ரத்தினக் கற்கள் கிடைக்கின்றன. விவசாயத் தொழில் நலிந்து விவசாயிகள் தொழிற்சாலைக் கூலிகளாக மாறுகின்றனர். இதனால் சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்தினக் கற்கள் வணிகத்திற்காகப் பன்னாட்டு நிறுவனம் ஒன்று உள்ளே வருகிறது. தொல்லியல் ஆய்வுக்கு உதவும் சாக்கில் ரத்தினக் கற்கள் பற்றி அறிய முற்படுகிறது. இதன் வலையில் தொல்லியல் ஆய்வாளர் குமார் சிக்குகிறார்.

மக்கள் நலனுக்காக நவீனும், கண்ணனும், குமாரும் ஒரே புள்ளியில் இணைகின்றனர். பெரிய வாசிப்போ, கள அனுபவமோ இல்லாத முல்லை, மக்கள் சார்ந்த விழிப்புணர்வை நோக்கி முன்னேறுகிறாள். இந்தச் சம்பவங்கள் மூலம் சமகால அரசியல், மக்கள் வாழ்க்கை, உலகமயமாக்கத்தின் கோரம் ஆகியவை முன்வைக்கப்படு கின்றன. இந்திய, தமிழ் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பல புனிதங்கள் உடைக்கப் படுகின்றன. தமிழனுக்கான அடையாள அரசியலை நாவல் முன்வைக்கிறது. கலை, அழகியல் ரீதியான குறைகள் தென்படுகின்றன, ஆனாலும் நாவலின் கருத்தியல் வலிமை வாசிப்போரை வசீகரிக்கிறது.

மிளிர் கல்

இரா. முருகவேள்

பொன்னுலகம் பதிப்பகம்

4/413, பாரதி நகர், 3-வது வீதி

பிச்சம்பாளையம் (அஞ்சல்)

திருப்பூர் 641 603

கைபேசி: 94866 41586

விலை: ரூ. 200

SCROLL FOR NEXT