குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் முகில் எழுதிய தொடரின் தொகுப்பு நூலே அகம் புறம் அந்தப்புரம். கனத்த மேலட்டையுடன் கூடிய 1032 பக்கங்கள். பார்த்தாலே பிரமிப்பு ஏற்படுத்தும் இந்த நூலை வாசிக்கத் தொடங்கினாலோ பிரமிப்பு அடங்குவதே இல்லை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் நமக்குத் தெரிந்த, தெரியாத அரசர்களின், ஆளுமைகளின் செய்திகளை வேறொரு புதிய கோணத்தில் கதையாக விவரித்துச் செல்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஈர்ப்பே சுவாரசியத்தைத் தர வல்லது எனும்போது அரசர்களின் அந்தப்புரத்தில் என்னதான் நடந்திருக்கும் என்னும் கேள்வி மேலும் ஆவலைத் தூண்டக்கூடியது. அந்தக் கற்பனைக்குத் தீனி போடக் கூடிய கதைகள், வரலாறுகள் ஆகியவற்றை அடக்கியுள்ளது இந்நூல்.
நூலின் மையமாக ராஜாக்கள் இருந்தாலும் சாமானியர்களின் வாழ்வு குறித்த அக்கறையும் இதில் வெளிப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் அரசனது குணங்கள் அவனை அண்டி வாழும் மக்களைப் பாதிக்கக்கூடியவை என்பதைச் சொல்லாமல் சொல்லும் வரலாற்றுச் சம்பவங்கள் நூலின் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன.
பைஜாமா நாடாவுக்கு முடிச்சுப் போடத் திணறிய மகாராஜா, ஷாம்பெயினில் குளித்த மகாராஜா எனப் பல மகாராஜாக்களின் வாழ்க்கை இந்நூலில் அப்பட்டமாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர் உள்ளிட்ட பல சமஸ்தானங்களின் பழங்கால வரலாற்றை ஊடுருவிப் படிப்போரைக் கவரும் எளிய மொழிநடையில் கதை போலச் சரித்திர நிகழ்வுகளை அடுக்கியுள்ளார் ஆசிரியர்.
அகம் புறம் அந்தப்புரம்
முகில்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை,
தி. நகர், சென்னை 600 017
கைபேசி: 72000 50073, விலை ரூ. 999