சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை சார்பில், ‘முகங்கள்’ குழுவினர் தயாரித்த ‘வியூகம்’ நாடகம், மிக முக்கியமான நிகழ்வு.
தங்கள் மண்ணை இழக்க விரும்பாமல் போராடும் பூர்வகுடி மக்கள் விரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மாவோயிஸ்டுகள், கடத்தல்காரர்கள், மரம் வெட்டுபவர்கள் என்றுகூட அடையாளமிட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
‘வியூகம்’ நாடக நிகழ்வைக் காண நேர்ந்தபோது இந்தக் கொடுமைகள் மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வனத்தை வணங்கி வாழும் ஒரு தமிழ் தொல்குடியைச் சேர்ந்த மக்கள் வேட்டைக்குத் தயாராவதுடன் நாடகம் தொடங்குகிறது. குடிகளின் தலைவன்/ தலைவி அன்று வேட்டைக்குச் செல்ல வேண்டியவர்களை உத்தி பிரிக்கும்போது ‘வயசில் மூத்தவங்க, பால் குடி மறக்காதவங்க, சடங்கு நடத்துறவங்க’ தவிர மத்தவங்க செல்லுமாறு கூறுவதும், ‘விண்ணமான மிருகங்க, சினை பிடித்தவை, இளம் குட்டிகள் தவிர நம்ம கூட்டத்துக்குக் காணும் அளவுக்கு ஒரே ஒரு மிருகம் மட்டும்’ கொண்டுவருமாறு கூறுவதும் நமது கானகக் குடிகள் வனங்களைப் பாதுகாப்பதில் செலுத்திவந்த, செலுத்திவருகின்ற, ஒழுங்கை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
தினவெடுத்து ஆடும் வேட்டைக்கும் இரையெடுப்பவர்கள் மேற்கொள்ளும் வேட்டைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது. கானக மனிதர்கள் தங்கள் இருப்பு, இயற்கையின் இருப்பைச் சார்ந்ததே என்பதை அறிந்திருந்தார்கள். அதனால்தான் இளங்குட்டிகள், கருத்தரித்தவை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டார்கள். இத்தகைய வேட்டையால் அந்த உயிரினம் அபூர்வமாகிப் போகாது.
ஒரே பெரிய விலங்காக வேட்டையாடி அதை அனைத்துக் குடிகளும் கூடி அமர்ந்து உண்டு, குடித்து, காதல் செய்து, இதற்காக வன தேவதைக்கும் படையல் செய்கிறார்கள். அதே சமயத்தில் அருகிலுள்ள பகுதியை ஆட்சி செய்பவர்கள் அந்நிய சக்திகளின் அடிவருடியாகி மொத்த இயற்கை வளங்களையும் அந்நியர்களுக்குத் திறந்துவிடத் தயாராகிறார்கள். இதற்காக அந்நியர்கள் வகுக்கும் வியூகத்தை உள்நாட்டு ஆட்சியாளர்கள் தலைமேற்கொண்டு செயலாக்குகிறார்கள்.
இதற்காக அவர்கள் வகுக்கும் வியூகம்தான் ‘ஓர் அம்பில் ஓராயிரம் உயிர்கள்’.
முதலில் பறவைகளை அழிக்கிறார்கள்; அடுத்து விலங்குகளை அழிக்கிறார்கள்; அடுத்து வனங்களை அழிக்கிறார்கள்; தங்கள் கண் முன்னால் தாங்கள் புனிதமாக மதிக்கும் கானகம் அழிவதைப் பொறுக்காது போராடும் தொல்குடிகளையும் அழிக்கிறார்கள்.
இத்தகைய பிரதியை உருவாக்கி மாணவர்களைக் கொண்டு சிறந்த அரங்க நிகழ்வாகப் படைத்துள்ள சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் கோ. பழனி மற்றும் ஆய்வு மாணவர் சீ. சாரதி கிருஷ்ணன் இருவரும் கவனத்துக்குரியவர்கள்.
பறை இசையும் தாள அசைவுகளும் செறிவான பண்களும் பாடல்களும் தெளிவான வசனங்களுமாக மரபான தமிழ் அரங்கு ஒன்றைக் கண்ட அனுபவம் நீண்ட காலத்துக்குப் பிறகு ஏற்பட்டது.