இலக்கியம்

விடு பூக்கள்: அமிதவ் கோஷ், எம்.டி. வாசுதேவன் நாயர், பூமணி

செய்திப்பிரிவு

சென்னைக்கு வந்த அமிதவ் கோஷ்

உலக அளவில் மதிக்கப்படும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்திருந்தார். தனது எட்டாவது நாவலான 'ப்ளட் ஆப் பயர்' நாவலை வெளியிட்டார். இபிஸ் ட்ரையாலஜி என்று அழைக்கப்படும் மூவியல் நாவல் தொடரின் இறுதி நாவல்தான் 'ப்ளட் ஆப் பயர்'. இதற்கு முன்பு சீ ஆப் பாப்பிஸ், ரிவர் ஆப் ஸ்மோக் ஆகிய இரண்டு நாவல்கள் வெளியாகியுள்ளன. இபிஸ் என்பது இந்த மூன்று நாவல்களிலும் வரும் கப்பலின் பெயர். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வங்காள விரிகுடாக் கடலில் கிழக்கிந்திய கம்பெனி நடத்தும் ஓப்பிய வர்த்தகம்தான் இந்த மூன்று நாவல்களின் கருப்பொருள். 19-ம் நூற்றாண்டு தெற்காசியச் சூழல், தனிநபர்களின் கதைகள் என அருமையாகப் பின்னப்பட்டிருக்கும் கதைகள் இவை. அமிதவ் கோஷ் எழுதிய 'ஷேடோ லைன்ஸ்' நாவல் 'நிழல் கோடுகள்' என்ற தலைப்பில் திலகவதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.டி. வாசுதேவன் நாயருக்கு விருது

கேரள அரசின் கலாசார அமைச்சகம் வழங்கும் இலக்கிய விருதான தகழி நினைவு விருது சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு வழங்கப்பட்டது. கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி வழங்கிய இவ்விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய வாசுதேவன் நாயர், தகழியைத் தனது குரு என்றும் வழிகாட்டி என்றும் கூறினார். மனிதர்கள் அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்தாலும் தங்களது முட்டாள்தனங்களையும் உணர்வதற்குத் தகழி சிவசங்கரனின் படைப்புகள் வகைசெய்யும் என்று வாசுதேவன் நாயர் குறிப்பிட்டார். மலையாள மொழியைச் சிறந்த தளத்துக்கு எடுத்துச் சென்றவர்களாகத் தகழி சிவசங்கரன் பிள்ளையையும், எம்.டி.வாசுதேவன் நாயரையும் குறிப்பிட்டுப் பேசினார் ஓமன் சாண்டி.

பூமணியின் புதிய நாவல்

அஞ்ஞாடி நாவலின் மூலம் தென்தமிழகத்தின் கரிசல் பூமி நவீனமான கதையை இருநூறு ஆண்டுகால சரித்திரச் சம்பவங்களின் மூலம் பிரம்மாண்டமான படைப்பாக மாற்றியவர் எழுத்தாளர் பூமணி. மகாபாரதம் தொடங்கி ஆண்டாள் வரை இந்தியாவில் பெண்களின் நிலையைச் சித்திரிக்கும் நாவல் ஒன்றை அவர் இப்போது எழுதிவருகிறார். பெண்கள், சந்ததிகளை விருத்தி செய்யும் இயந்திரமாகக் காலம் காலமாகப் பாவிக்கப்படுவதை இந்தப் படைப்பில் விமர்சிக்கிறார். இந்த நாவலுக்கான கள ஆய்வுப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார் பூமணி.

தொகுப்பு:ஷங்கர்

SCROLL FOR NEXT