குஷ்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.
புத்தக வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை பயணங்களுடன் தொடர்புடையது. பயணங்களின்போதுதான் ‘புத்தகம் வாசிக்கலாமே’ எனும் எண்ணம் வரும்.
ஒரு சொல் வெவ்வேறு இடங்களில் ஏற்படுத்தும் அர்த்தங்களைப் புத்தக வாசிப்பில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும்.
அமெரிக்க எழுத்தாளர் பெட்டி மக்மூதி எழுதிய ‘நாட் வித்தவுட் மை டாட்டர்’ புத்தகம் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று. ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண், அந்த நாட்டிலிருந்து எப்படியாவது தன் மகளையும் மீட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டும் என்று போராடும் பின்னணியில் எழுதப்பட்ட புத்தகம்.
அதேபோல, தஸ்லீமா நஸ்ரின் எழுதிய ‘லஜ்ஜா’ புத்தகமும் பிடித்தமானது. இப்படி ஆங்கிலப் புத்தகங்கள் என் அலமாரியை அடைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மூத்த பத்திரிகையாளர் சோலை திமுக பொருளாளர் ஸ்டாலின்குறித்து எழுதிய ‘ஸ்டாலின்’என்ற புத்தகம் என் கைக்குக் கிடைத்தது.
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர் கடந்தவந்த பாதையைப் படித்தபோது மிகவும் வியப்பாக இருந்தது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே சிறை வாசம்; சரியான உணவுகூட இல்லாமல் சிறையில் அவர் எதிர்கொண்ட கொடுமைகள் பற்றியெல்லாம் படித்தபோது, தனி ஒரு நபராக இந்த சமூகத்தில் ஒரு அடையாளத்தைப் பெறுவதற்குப் பல விதமான வலிகளைக் கடந்தே வர வேண்டியுள்ளது என்பதை உணர முடிந்தது.
இன்றைக்கு அவர் ஒரு கட்சி, நான் வேறு ஒரு கட்சி சார்ந்து செயல்பட்டாலும் அவர் மீது அதிகப்படியான மதிப்பை உண்டாக்கிய புத்தகமாகவே இதைப் பார்க்கிறேன்.