இலக்கியம்

யார் நல்லவன்?

அசோகமித்திரன்

நவீன விருட்சம் இதழின் சார்பில் சென்னை தி.நகர் ராதா கிருஷ்ணன் தெருவில் உள்ள அலமேலு மங்கை கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்பில் கவிஞர் ஞானக்கூத்தன் பற்றிய ஓர் ஆவணப் படம் காட்டப்பட்டது. வினோத் என்ற இளைஞர் மிகவும் சிறப்பாக எடுத்திருந்தார்.

அன்று பேசப்பட்ட பல விஷயங்களில் ஒன்று தீவிர சிந்தனைக்கு இடமளிப்பது. கவிஞன் தன் கவிதை மூலமாக வாசிப்போரின் மனதுள் புகுவதால் கவிஞன் நல்லவனாக இருப்பது அவசியமாகிறது. கவிஞன் நல்லவனாக இருக்க வேண்டும்.

இதை மறுப்பதற்கில்லை. ஏன், எல்லாருமே நல்லவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நல்லவன் யார்?

இந்தக் கேள்விக்கு ஆயிரம் பதில்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தில் அடிபட்டுப் போய் விடும். இந்த ஆயிரம் விதமான நல்லவர்கள் கவிதையே எழுதாது போய்விடலாம். ஓரிருவர் எழுதினால் அது நல்ல கவிதையாக அமையாமல் போய் விடலாம். அறுபத்து மூன்று நாயன்மார்கள் இருந்தாலும் எல்லாரும் இறைவன் புகழைக் கவிதையாகப் பாட வில்லை. பகவான் ராமகிருஷ்ணருக்குப் பாட்டு பிடிக்கும். ஆனால் புனைகதைகள் எழுதுவோர் மீது நம்பிக்கை கிடையாது. மேலையக் கவிதை வரலாறில் கவிஞர்கள் உத்தம சீலர்களாக இருந்தது மிக மிக அரிது

ஐக்கிய அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டு இறுதியில் ‘டிரான்ஸெண்டெண்டலிஸம்’ என்றதோர் இயக்கத்தை எமெர்ஸன் என்ற அறிஞர்-கவிஞர் தலைமையேற்று நடத்தினார் இது இம்மை மறுமை இரண்டையும் தன் அக்கறையாகக் கொண்டது. எமெர்ஸன் தானறிந்த பிரம்மத்தை ‘பிரம்மா’ என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தியத் தத்துவங்களில் துவைதம் என்ற மார்க்கத்தில்தான் கடவுளும் மனிதனும் இரு வேறு உருக்கள். ஆனால் மனிதனே பிரம்மத்தில் அடங்கியவன் என்பதுதான் இந்தியப் பொது நோக்கு. டிரான்ஸெண்டண்டெலிஸம் இருபது முப்பது ஆண்டுகளில் கலைந்துபோயிற்று.

ராமலிங்க அடிகளார் புனிதத்தையே வலியுறுத்தினார். ஆன்மிக இயக்கங்கள் எல்லாமே நல்லொழுக்கம், நல்லவனாக இருத்தலை வலியுறுத்துபவை. ஆனால் பாவிகளையும் கடவுள் புறக்கணிக்க மாட்டார், ஆண்டவனை நம்பினால் போதும். ‘‘மகளே, நீ பாபம் செய்யாதிருப்பாயாக” என்றொரு புகழ் பெற்ற கதையை ஓர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். (கே. டானியல் என்று ஞாபகம்.) ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே பாபத்தில்தான் ஓடுகிறது. பாபம் இல்லையென்றால் அவள் பட்டினி கிடந்து சாக வேண்டும்

இதெல்லாம் நல்லவனுக்கு இலக்கணம் தர முடியுமா? யார் நல்லவன்?

SCROLL FOR NEXT