தமிழில் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
‘கணக்கற்ற’ என்று சொல்லும்போதே ‘கணக்கில்’வராமல் காணாமல் போன நூல்களைப் பற்றிய எண்ணம் நமக்கு வரும்.
ஆனால், அப்படிக் காணாமல் போன நூல்கள்பற்றிய விவரங்களைத் தொகுத்து, ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ எனும் பெயரில் ஒரு புத்தகத்தையே எழுதினார் மயிலை. சீனி வெங்கடசாமி (1900 - 1980).
இலக்கிய நூல்கள், காவியங்கள், இசைத் தமிழ் நூல்கள், நாடகத் தமிழ் நூல்கள் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் காணாமல் போன நூல்கள்பற்றிய விவரங்களைக் கடும் உழைப்பின் பின்னணியில் அவர் தொகுத்திருந்தார்.
இந்நூல்கள் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தனது தொகுப்பில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டிருக்கும் பல நூல்களின் நூலாசிரியர்கள் பெயர்களே கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.