பத்தி எழுத்துப் போக்கு தமிழில் உருவாக்கிய சுவாரசியமான எழுத்தாளர்களில் ஒருவர் பாரதிமணி. அதிகாரக் காய்நகர்த்தல்களும் சாதாரண இந்தியர்கள் அறியவே வாய்ப்பில்லாத ரகசிய விளையாட்டுகளும் நடக்கும் தந்திர பூமி டெல்லி.
வரலாற்றில் நமக்குத் தெரிந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இருந்த சுவாரசியான கதைகளை இவர் உயிர்மை இதழ் வழியாக வழியாக எழுதிய கட்டுரைகள் மற்றும் இவரது நண்பர்களின் அனுபவக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் நாகர்கோவிலிருந்து டெல்லி சென்ற பாரதி மணி, பாரத் எலக்ட்ரானிக்சில் ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்தவர். சுஜாதா மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எழுதிய நாடகங்கள் வழியாக நடிகரானவர்.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான குணச்சித்திர நடிகராகவும் இருக்கிறார். பாரதி மணியின் வயதுக் கணக்குப்படி அவர் வயோதிகராக அறியப்பட்டாலும் சிறுகசப்புகூட சுய எள்ளல் மற்றும் உள்ளார்ந்த நேயத்துடன் அவர் கடந்த அனுபவங்களையும் மனிதர்களையும் பற்றி பேசுகிறார். எந்த விஷயத்தைப் பற்றியும் பேச அவருக்கு மனத்தடை இல்லை.
டெல்லியில் 55 ஆண்டுகள் வாழ்வனுபவம் பெற்ற பாரதி மணி பஞ்சாபியர்களின் தன்னிறைவான வாழ்க்கை மற்றும் நட்பார்த்தம் பற்றி பேசும்போது அவர்கள் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. அவரது மாமனார் க.நா.சு பற்றி நமக்குத் தெரியாத பல தகவல்கள் இந்நூல் மூலம் கிடைக்கின்றன. சக மனிதர்கள், அவர்கள் பிரபலங்களாக இருக்கலாம். சாதாரண மனிதர்களாக இருக்கலாம்.
நல்லவர்கள், கெட்டவர்கள், ஊழல்வாதிகள், சபலர்கள் என்ற பாகுபாடின்றி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை விடுபட்ட நிலையில் பார்க்கவும் தெரிந்த பாரதி மணியின் பதிவுகள் நாம் இக்காலத்தில் அறியவேண்டியவையே.
டெல்லியில் வாழ்ந்தபோது எத்தனையோ மனிதர்களுக்கு விடைகொடுத்த நிகம்போத் சுடுகாடு பற்றி அவர் எழுதியிருக்கும் கட்டுரை அவர் எவ்வளவு பெரிய மனிதாபிமானி என்பதைக் காட்டும்.
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
பாரதிமணி
வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601
விலை: ரூ.550/-
தொடர்புக்கு: 9445870995