உலகம் எப்படி உருவானது? மனிதர் கள் எவ்வாறு தோன்றினார்கள்? சந்திர, சூரியர்கள் எவ்வாறு உருவானார்கள்? இரவும் பகலும் ஏன் வருகின்றன என்பது போன்ற கேள்விகள் ஆதிமனிதன் காலத்தில் இருந்தே கேட்கப்பட்டு வருகின்றன. இதற்கு, அறிவியலும் வரலாறும் பதில் தருகின்றன. இதே கேள்விகளுக்கு உலகெங்கும் உள்ள பழங்குடி மக்கள் பல கதைகளைப் பதிலாக தருகிறார்கள்.
கற்பனையால் நெய்யப்பட்டவை இக்கதைகள். வியப்பும் பயமும் ஒன்று கலந்தவை. இயற்கையை மனிதர்கள் எப்படி புரிந்துவைத்திருந்தார்கள் என்ப தன் அடையாளமே இக்கதைகள்!
உலகெங்கும் பழங்குடி மக்களால் சொல்லப்படும் இயற்கைக் குறித்த கதை களைத் தொகுத்து, ‘கால்முளைத்த கதைகள்’ என்ற பெயரில் சிறுவர் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.
இந்த நூலை உருவாக்குவதற்கு எனக்கு உத்வேகமாக இருந்த புத்தகம் ‘வெரியர் எல்வின்’ தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது’ கதை தொகுப்பாகும். பழங்குடி மக்களின் தொன்மங்களையும் கதைகளையும் கொண்ட தொகுப்பு அது. சிறார்கள் விரும்பி படிக்கும்படியாக 6 தலைப்பு களில் 38 கதைகள் இதில் உள்ளன. ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.
‘வெரியர் எல்வின்’ ஒரு மானுடவியல் ஆய்வாளர். ‘கோண்டு’ பழங்குடி மக்க ளின் மேம்பாட்டுக்காக 20 வருடங் களுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
இங்கிலாந்தின் டோவரில் பிறந்த இவரது முழுப் பெயர் ஹேரி வெரியர் ஹோல்மன் எல்வின். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக் கியத்தில் பட்டம் பெற்ற இவர் சமயத் துறை படிப்பில் தேர்ச்சி பெற்று, கத்தோ லிக்க சமயப் பரப்பாளராக பணியாற்று வதற்கு இந்தியா வந்து சேர்ந்தார்.
புனேயில் உள்ள கத்தோலிக்க சமய நிறுவனம் ஒன்றில் சில மாதங்கள் சேவை செய்த இவர், காந்தியக் கோட்பாடுகளால் கவரப்பட்டு மகாத்மா காந்தியைச் சந்தித்து உரையாடி, சபர்மதி ஆசிரமத்தில் சேவை செய்தார். காந்தியக் கோட்பாடுகளின்படி வாழவேண்டும் என்று காலில் செருப்பு அணியாமல், வெறும்தரையில் படுத்து உறங்கினார். எளிமையான தினசரி வாழ்க்கையை மேற்கொண்டார்.
1932-ல் காந்தி கைது செய்யப்பட்ட நேரத்தில் எல்வினும் உடனிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியை எல்வின் எதிர்க்கிறார் என்பதால், அவரும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார். பழங்குடி மக்களோடு வாழ்ந்து சேவை செய்வது என முடிவு செய்து, ‘கோண்டு’ இன மக்கள் வாழும் கரஞ்ஜியா என்ற மலைக் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து, சேவை செய்ய ஆரம்பித்தார். பின்பு ‘பஸ்தர்’ பழங்குடி இன மக்கள் வாழும் சித்ரகோட்டில் சில காலம் சேவை செய்தார்.
1940-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் ‘கோண்டு’ பழங்குடி இனப் பெண்ணான கோசியை திருமணம் செய்துகொண்டார். பழங்குடி மக்களின் வாழ்க்கைக் குறித்து நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். மத்தியப் பிரதேசம், ஒடிசா, பிஹார் என்று சுற்றி அலைந்து பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார்.
ஆதிவாசிகளின் பண்பாட்டினைப் புரிந்துகொள்ளாமல், காட்டு இலாக்காவினர் அவர்களைக் கட்டாய இடமாற்றம் செய்தபோதும், இலை ஆடைகளுக்குப் பதி லாக துணி ஆடைகளை உடுத்தும்படி கட்டாயப்படுத் தியபோதும், அதைக் கண்டித்துப் போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறார் எல்வின். இந்திய மானுடவியல் நிறுவனத்தின் துணை இயக்குநராக சில ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். இவர் தொடங்கிய ‘கோண்டு’ சேவா மண்ட லம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
பழங்குடிகள் தாங்கள் பூமி பிளந்து உருவானவர்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே, பூமியின் மீது உள்ள அவர்களின் உரிமை பிறப்பிலே உருவானது; அதை எவராலும் பறிக்க முடியாது என சுட்டிக்காட்டுகிறார் எல்வின்.
பிரபஞ்சம் உருவானது எப்படி? மனித னுக்கு உடல் உறுப்புகள் உருவானது எப்படி? முதன்முறையாக ஆடை நெய்வது அறிமுகமானது எப்படி? நெல் விளைந்தது எப்படி? பறவைகள் ஏன் சத்தமிடுகின்றன என்று பல்வேறு தளங்களைச் சார்ந்த நம்பிக்கைகளை, கதைகளைத் தொகுத் திருக்கிறார் எல்வின். இந்தக் கதைகளின் ஊடாக பழங்குடி மக்களின் இயற்கை குறித்த விசேஷமான புரிதல்களை அறிந்துகொள்ள முடிகிறது.
முன்பொரு காலத்தில் பெண்களுக் கும் தாடியிருந்தது. அந்தத் தாடியைக் கடன்பெற்ற ஆடு திருப்பித் தரவே இல்லை. இந்த ஏமாற்றம் காரணமாகவே பெண் தாடியை இழந்தாள். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பெண் களுக்கு தாடி வளர்வதில்லை என்கிறது ஒரு கதை.
இதுபோலவே ‘காற்றுக்கு கண் இல்லை’ என்பதால்தான் அது எல்லாவற்றின் மீதும் மோதுகிறது. குயிலுக்கு நிறையப் பாடல்களை பாட வேண்டும் என்ற பேராசை. அதனால் தான் சின்னஞ்சிறு பாடல்களாக எப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறது என்கிறது இன்னொரு கதை.
‘வானம் ஒரு காலத்தில் கைதொடும் தூரத்தில் இருந்தது. தன் தலையின் மீது இடிக்கிறதே என்று ஒரு கிழவி தன் துடைப்பக் கட்டையை ஒங்கி அடிக்க முயற்சித்தாள், பயந்து போன வானம் தொலைதூரத்துக்குச் சென்றுவிட்டது’ என்பது ஒரு கதை.
‘ஒரு காலத்தில் யானைகளுக்கு நான்கு றெக்கைகள் இருந்தன. இதனால் மக்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளானார்கள். ஆகவே, கடவுள் அந்த றெக்கைகளில் இரண்டை வெட்டி மயிலுக்கு தந்தார். மீதமான இரண்டை வாழை மரத்துக்கு தந்தார். ஆகவேதான் வாழை நீளமான இலைகளைக் கொண்டிருக்கிறது’ என்பது வேறொரு கதை.
இயற்கையின் இயல்பினை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் இப்படியான கதைகளை ஆதிமனிதர்கள் உருவாக்கி யிருக்கிறார்கள்.
பழங்குடி மக்கள் என்றாலே நாகரீக மற்றவர்கள் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கியவர்கள் ஐரோப்பியர்களே. எல்வின் அச்சித்திரத்தை உருமாற்றி, பழங்குடி மக்களின் தனித்துவத்தை, கற்பனைவளத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
குறிப்பாகப் பழங்குடி மக்கள் காசு கிடைக்கும் என்பதற்காக மட்டும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவனைக் காசு கொடுத்து மீன் பிடித்து வரச் சொல்வது மிகவும் கடினம். காரணம், பணம் கிடைக்கிறதே என ஒருவனும் மீன் பிடிக்க போக மாட்டான்.
பழங்குடி மக்களை இந்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை அவர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். பழங் குடி மக்களை நகரவாசிகள் அதிகம் ஏமாற் றுகிறார்கள் என்று கூறும் எல்வின், நீதி மன்ற வழக்குகளுக்காக வரும் ஆதிவாசி மக்களிடம் நீதிமன்ற எழுத்தர்கள் நான்கு விதமான பேனாக்களைக் காட்டி, எந்த பேனாவில் எழுத வேண்டும் என்று கேட் பார்கள். காரணம், ஒவ்வொரு பேனாவில் எழுதுவதற்கும் ஒரு ரேட். இப்படி பழங்குடியினரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகம் பணம் பிடுங்கியது நகரவாசிகளே என்கிறார்.
இறந்து போன மூதாதையர்களும், தெய்வமும், இயற்கையும் தங்களுக்கு எல்லா நிலைகளிலும் துணையாக இருக்க வேண்டும் என பழங்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே இது போன்ற கதைகளை, பாடல்களை, நம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள்
எழுத்திலக்கியங்கள் உருவாவதற்கு முன்பாகவே வாய்மொழி வழக்காறு கள் உருவாகிவிட்டன. தனித்த பாரம் பரியத்தையும், சடங்கியல் முறையையும் கொண்ட பழங்குமக்களின் வாழ்க்கை, இன்று கடும்நெருக்கடியைச் சந்திக்கிறது. கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வனத்தை விட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களைத் துரத்துகின்றன. காட்டை இழந்த அவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
இதன் காரணமாக பழங்குடி மக்களின் வாய்மொழி வழக்காறுகள் வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றை சேகரிப் பதும் பேணிக் காப்பதும், ஆய்வு செய் வதும் அவசியமான பணியாகும். இது போன்றதொரு முன்னோடி முயற்சி யாகவே எல்வின் இந்நூலை தொகுத் திருக்கிறார். கதை சொல்லிகளுக்கு இது ஒரு சிறந்த கையேடாகும்.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லா புத்தகங்கள் 32: அறிவின் வரைபடம்!