இலக்கியம்

புத்தகத்தோடு சேர்ந்த நட்பு

மகராசன் மோகன்

படிக்கும் பழக்கம் எப்போது வந்ததென்று சரியாகச் சொல்ல முடியவில்லை. எனது சிறு வயதில் குறிப்பிட்ட சில கச்சேரிகள், செய்திகள், கிரிக்கெட் வர்ணனை இதற்காகத்தான் ரேடியோ கேட்கும் வழக்கமும் இருந்தது. விளையாட்டு நேரம் போக சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் எல்லோருமே அவரவர் வயதுக்கு ஏற்ற அம்புலி மாமா தொடங்கி தமிழ், ஆங்கில புத்தகம் படிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தாத்தா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வாங்கி குறிப்பிட்ட சில சொற்களுக்குத் தமிழில் அர்த்தம் என்ன என்று பள்ளி முடிந்து வரும்போது சொல்ல வேண்டும் என்று கூறி அனுப்புவார். வாசிப்புப் பழக்கம் அப்படித்தான் வந்தது. 6 ம் வகுப்பு படிக்கும்போது நூலக வாசகியாகப் பதிவுசெய்துகொண்டு நிறைய குழந்தைகள் புத்தகம் எடுத்து வந்து படிக்கத் தொடங்கினேன். அப்படியே தொடர, 10 வயதுக்கு மேல் தமிழை நன்றாக வாசிக்கப் பழகிய நாட்களில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை அம்மா வாசிப்பது தெரியவந்தது. இரவு 9 மணிக்குத் தூங்குவதற்கு முன் 30 நிமிடம் வீட்டில் எல்லோரும் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர்.

குறிப்பாக, இந்தப் புத்தகம்தான் என்னை கவர்ந்தது என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், நிறைய புத்தகங்கள் சேர்ந்துதான் என்னை உருவாக்கின. வீட்டில் நான் மட்டும் ஒரே பிள்ளை என்பதால் எனக்குத் துணையே புத்தகங்கள்தான். யவன ராணி, தில்லானா மோகனாம்பாள், பொன்னியின் செல்வன் முதலான நாவல்களையும், சாண்டில்யன், அகிலன் என்று எல்லோருடைய எழுத்துகளையும் வாசித்திருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் ஜெயகாந்தன் முற்றிலும் வேறுபடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் மட்டும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை நமக்குத் தருபவையாக இருக்கின்றன. அதனால்தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து ஜெயகாந்தனைத் தனியே பிரித்துப் பார்ப்பேன். ஒவ்வொரு பிரச்சினையையும் அவர் அலசுகிற விதமும், வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் நமக்குக் கைகொடுக்கும்.

ஒரு கட்டத்தில் நிறைய ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள் நண்பர்களாகவும் கிடைத்தார்கள். குறிப்பாக, அனுராதா ரமணன் மிக நெருக்கமான தோழியாக மாறினார். சினிமாவுக்கு வந்த 19, 20 வயதில் நிறைய வாசிக்கும் வாசகியாகவும் என்னால் இருக்க முடிந்தது. அப்போது சினிமாவில் நிறைய நடிகர்கள், டெக்னீஷியன்கள் படிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். அப்போது ஊடகங்கள் குறைவு. தொலைக்காட்சி பார்ப்பதற்கும் நேரம் இருக்காது. படப்பிடிப்புக்குப் போகும், வரும் நேரங்களிலும் புத்தகங்கள்தான் துணை. புத்தகங்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு குழுவைத் திரைப்பட உலகில் நாங்கள் உருவாக்கினோம். என்னுடைய 20-வது வயதில் நாவல்கள் படிப்பதை விட்டுவிட்டேன். அதன்பிறகு கதையல்லாத புத்தகங்கள்தான் (நான் பிக்‌ஷன்) அதிகம் ஈர்த்தன.

எனது 17, 18 வயது முதல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினம் இரவு தூக்கத்துக்கு முன்பு ஒரு திருக்குறள் படித்து, அதன் அர்த்தம் தெரிந்துகொள்வது வழக்கமாக இருந்தது. அதை எப்படி விட்டேன் என்று தெரியவில்லை. ஒரு பெரிய மகான். ஒன்றரை அடியில் எவ்வளவு விஷயங்களைக் கூறியிருக்கிறார். சமீபத்தில், ‘மகாபாரதம் ஒரு மாபெரும் யுத்தம்’ புத்தகம் வாசித்தேன். பழ.கருப்பையா எழுதியது. மகாபாரத்தை வித்தியாசமான கோணத்தில் அலசியிருப்பார். அடிக்கடி பாரதியார் புத்தகங்கள்தான் ஈர்க்கும். பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்கள்… இவற்றையெல்லாம் ஏன் படிக்கிறேன் என்று கேட்கவே வேண்டாம். பாரதியைக் காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? என்ன? அதேபோல, சுவாமி ராமாவின் ‘லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகம் அவ்வளவு எளிய ஆங்கிலத்தில் உள்ள புத்தகம். பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை’ நூலை மூன்றாவது முறையாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

குழந்தைகளுக்கு எத்தனை விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், ஒரு பேப்பரில் அட்டைப் பெட்டிபோல ஒரு கப்பலை செய்துவைத்தால் அதில் ஆர்வம் அதிகம் செல்லும். அப்படித்தான் இரவு 9 மணிக்கு வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தோடு முடங்கி அந்த உலகத்துக்குள் போய்விடுவோம். என்னைவிட என் கணவர் அதிகம் படிக்கக்கூடியவர். குறிப்பாக, கதைகள் என்றால் அவருக்கு உயிர். கடந்த 30 ஆண்டுகளாக எங்களுக்குள் ஒரு நல்ல நட்பை உருவாக்கிக்கொடுத்திருப்பதே புத்தகங்கள்தான். தெளிவு, அறிவு கொடுக்கும் ஒரே விஷயம் புத்தகங்கள்தான். நல்ல நட்பு வேண்டுமென்றால் புத்தகங்களோடு நட்பு பாராட்டினால் அது என்றைக்கும் துரோகம் செய்யாது.

SCROLL FOR NEXT