இலக்கியம்

வடகரை: பெண்ணின் ஆறாத் துயரம்

கி.ராஜநாராயணன்

நாவல் என்று நினைத்துக்கொண்டிருந்த அதன் வடிவம் உடைந்து ரொம்ப ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. எழுத்தாளர் பொன்னீலனின் அம்மா எழுதிய ‘கவலை’ என்கிற சுயசரிதையை நாவல் என்றே சொன்னோம். டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘வடகரை’யைக் கவிஞர் கலாப்ரியா நாவல் என்று கூறுகிறார்.

சம்பவங்களைக் கோத்துச் சொல்வதற்கும் கதைகளாகக் கோத்துச் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. நாக்கை விட்டு நாக்கு பயணம் செல்லும்போது கட்டாயம் வடிவம் மாறுபடும். சம்பவங்களெல்லாம் கதைகளாக மாறியது இப்படித்தான். வரலாற்றை எழுதும்போது மாற்றி எழுதக் கூடாது. கதை அப்படி இல்லை. கேட்டுக்கொண்டு எதிரே இருப்பவர்களைப் பொறுத்து வளைந்து கொடுக்கும்.

கதைக்கு ஆயுள் கூடக்கூட சுவாரசியம் அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். இப்படித்தான் மகாபாரதம் விரிந்து கொண்டே இருக்கிறது.

வரலாற்றைச் சரிதமாக எழுதுவது என்பது ஒருவகை. வரலாற்றை நாவலாக எழுதுவது என்பது இன்னொரு வகை. ஆசிரியர்கள் வரலாற்றைச் சரிதமாகக் கூறுவர். கதைசொல்லி வரலாற்றை நாவலாகச் சொல்லுவான். கதையாகச் சொன்னது மக்களிடம் நிற்கும்.

வடகரை வம்சத்தின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கி பல பக்கங்களைக் கடக்கும்போது, மற்றுமொரு ‘கோபல்ல கிராமம்’ கதைபோலத் தோன்றியதால் பக்கங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன.

கன்னிநிலத்தில் உழும் கன்னிக் கலப்பை போல எழுத்தின் நடை பழக்கமில்லாத நடைபோல இடறிற்று கொஞ்சம்.

வெள்ளைக் கிழக்கிந்தியக் கம்பெனி என்பது எப்படி சாம்ராஜ்ஜியமாக விரிந்தது என்பதை விலாவரியாகச் சொல்கிறார் ஆசிரியர்.

“அப்படியா, இப்படியெல்லாம் நடந்ததா” என்று நமக்குள் கேட்டுக்கொள்கிறோம்.

25-ம் பக்கத் தொடக்கத்தில், “என் அப்பாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் நாங்கள்…எங்களுக்குக் கிடைத்தது பெரும் தனிமைதான். இரண்டாம் மனைவி என்ற நிலை பெரும் துயரம் நிரம்பியது. அவமானம் தரக்கூடியது” என்கிறார் ஆசிரியர்.

ஆனால், உண்மை- இலக்கிய உண்மைகள்- சொல்வது வேற. தசரதச் சக்கரவர்த்தி தனது இரண்டாந்தார மனைவியிடம் பட்டபாடு சொல்லி முடியுமா! நட்சத்திர மகிமை அடைந்த துருவன் தனது சிறிய தாயிடம் பெற்ற கொடுமைகள்! ஞானசவுந்தரி கதையில் வரும் சித்தியின் கொடுமை! எழுத்தாளர் புதுமைப்பித்தன் அனுபவித்த சித்தியின் கொடுமை.

‘வடகரை’-யில் வரும் ஜெயலட்சுமி என்கிற சித்தாத்தாள், வித்தியாசமான மனுஷியாக இருக்கிறாள்! அந்த அம்மையின் சிகப்பு நிறமும் அழகும் மாதச் சம்பளமும் ஒரு அருமையான துருப்புச்சீட்டு அல்லவா!, அந்தக் கணவனை, கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கலாம் என நினைத்திருந்தால்.

தந்திரம் செய்வதே தெரியாமல் தந்திரத்தால் வீழ்த்துவது தான் கெட்டிக்காரத்தனம். பேதைமை கொண்டு வாழ்வது தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் செய்யும் அநியாயம்.

தமிழ் போன்ற சீர்மொழியில் அந்த மக்களிடம் இடத்துக்குத் தக்கபடி ஒவ்வொரு பகுதியிலும் ஜாடை பதிந்த மொழியில்தான் பேசுவார்கள். அந்தந்த மண்ணில் தோன்றும் கதைசொல்லிகள் அந்த மொழி அழகில் எழுதுவதே சிறப்பு.

மக்கள் பேசுகிற மொழி ஒலிப்பை வைத்தே, “ ஓ… நீங்கள் இந்தப் பக்கத்து மனுசாட்களா” என்று கண்டு கொள்வார்கள். எழுத்திலும் இப்படி இருக்கிறது.

இப்படியான எழுத்தில், அதை வலிய வரவழைக்காமல் இயல்பாகச் சொல்ல வேண்டும்.

“அந்தத் தரையில் கிடைக்கும் மண்ணைக்கொண்டே அங்கே வீட்டைக் கட்டுவதுபோல” என்றும் சொல்வார்கள்.

ஆயிரத்தில் பாதிப் பக்கங்கள் கொண்ட கனமான இந்த நூலை வாங்கியதும் எனது மன ஓட்டம் இப்படி இருந்தது.

ஆதியிலிருந்து அந்தம் வரை இந்நூல், பெண்ணின் ஆறாத் துயரத்தையே சொல்கிறது. இந்த நூல் மட்டுமா, ராமாயண, மகாபாரதங்களிலிருந்து இன்றைய கதைகள் வரை பெண்களின் துயரங்களைப் பிழியப்பிழிய சொல்லிக் கொண்டேபோகின்றன.

கடேசியில், மேகமின்றி, மின்னலின்றி வெண் இடி தாக்கியதுபோல் வாசகன் தலையில் இடி விழுகிறது. அதைப் படித்ததும் அதற்கு மேல் நகரமுடியவில்லை. நாலு நாட்கள் கிடையிலேயே கிடந்தது புத்தகம், ராயகோபுரம் போல. அதுக்குப் பிறகு என்ன இருக்கு படிக்க.

வடகரை இரண்டாம் பாகம் வந்தால் உண்டு.

தமிழில் இப்போது நாவல்களுக்கு அடைமழைக்காலம். கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்கிறது. கொட்டட்டும். கொட்டட்டும்.

- கி.ராஜநாராயணன்,

தமிழின் முக்கியமான எழுத்தாளுமைகளுள் ஒருவர். ‘கோபல்ல கிராமம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

வடகரை (ஒரு வம்சத்தின் வரலாறு)

டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப

அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு,

வந்தவாசி-604408.

தொலைபேசி: 94980 47637, விலை: ரூ.400

SCROLL FOR NEXT