தமிழ்க் காப்பியங்களில் ‘ஐம்பெருங்காப்பியங்கள்’, ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ‘உதயணகுமார காவியம்’, ‘யசோதர காவியம்’, ‘நாககுமார காவியம்’, ‘சூளாமணி’, ‘நீலகேசி’ஆகியவை ஐஞ்சிறு காப் பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றான ‘உதயணகுமார காவியம்’ விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்கள் கொண்ட இந்நூலில் 367 பாடல்கள் உள்ளன.
அவந்தி நாட்டு மன்னன் பிரச்சோதனனால் சிறை பிடிக்கப்படும் கெளசாம்பி மன்னன் உதயணன் அதிலிருந்து தப்பி, பிரச்சோதனனின் மகளைக் காதலித்துத் திருமணம் செய்கிறான். இறுதியில் துறவறம் மேற்கொள்கிறான் என்று செல்லும் கதை இது. சமண சமயத்தைச் சேர்ந்த பெண் துறவியால் பாடப்பட்டது என்று கருதப்படுகிறது. 1935-ல் உ.வே. சாமிநாதையரால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. முனைவர் பழ. முத்தப்பனின் விளக்க உரையுடன் சமீபத்தில் இந்நூல் உமா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.