என் வாழ்வை வடிவமைத்ததே புத்தகங்கள்தான். அப்பா நிறைய புத்தகங்கள் வாங்கித் தருவார். கல்லூரி நாட்களில் திருச்சி சிந்தாமணி நூலகத்திலேயே பழியாகக் கிடப்பேன். சென்னை வந்த பின்னர், அசோக் நகர் நூலகம் எனது இன்னொரு வீடானது. மொழிபெயர்ப்பு நூல்கள், ரஷ்யப் புரட்சி, கம்யூனிஸம் தொடர்பான நூல்கள், நாட்டார் வழக்காற்றியல் என்று பல வகையான புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.
நான் இருக்கும் துறையில் உள்ள மிகப் பெரிய வசதியே, புத்தக வாசிப்பாளர்களின் தொடர்பும், நல்ல புத்தகங்களின் அறிமுகம் கிடைப்பதும்தான். அந்த வகையில் நான் பாக்கியசாலி. நான் வாசித்த பல புத்தகங்கள் ஊடக, எழுத்தாள நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டவைதான்.
எனது அலுவலகத்தில் 800 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறு நூலகமே வைத்திருக்கிறேன். அதேபோல், புத்தகக் காட்சிகளுக்கு 3 நாட்களாவது சென்றுவிடுவேன். அங்கே தேடித் தேடி புத்தக வேட்டை நடக்கும். ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை பல எழுத்தாளர்களின் வாசகன் நான். பிடித்த நாவல் என்றால் பளிச்சென்று நினைவுக்கு வருவது, தனுஷ்கோடி ராமசாமி எழுதிய ‘தோழர்’நாவல், கம்யூனிஸம்தான் அடிப்படை என்றாலும், மெல்லிய நட்பு அடிநாதமாக இழையோடும்.
சமீபத்தில் எழுத்தாளர் இமையம் தான் எழுதிய ‘சாவு சோறு’ சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். ஒவ்வொரு கதையிலும் வாழ்வின் தருணங்களை வரைந்திருக்கிறார் இமையம். கல்லூரி நாட்களில் சுவாசம்போல் வாசிப்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை என்றாலும், வாசிப்புக்காக நேரத்தை வளைக்க முயற்சி செய்கிறேன். கூடவே ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன். நேரம் கிடைக்கும்போது அதில் மூழ்கிவிடுவேன். ஏனெனில், புத்தகங்கள் நண்பர்கள் மட்டுமல்ல, வாழ்வைத் தீர்மானிக்கும் வழிகாட்டிகள்!