திருடன் மணியன்பிள்ளை. நான் சமீபத்தில் படித்து முடித்த புத்தகங்களில் ஒன்று. மணியன்பிள்ளையின் சுயசரிதை. கேரளாவில் திருட்டைத் தொழிலாகச் செய்தவர், மணியன்பிள்ளை.
ஒரு கட்டத்தில் தன் உண்மையான பெயரை மாற்றி வைத்துக்கொண்டு மைசூருக்கு இடம்பெயர்கிறார். சில ஆண்டுகளிலேயே மைசூரில் எல்லோராலும் அறியப்படுகிற தொழில் அதிபராக வலம்வருகிறார். மைசூரில் அப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். பரபரப்பாகத் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் பழைய வழக்கு ஒன்றின் காரணமாகக் கைது செய்யப்படுகிறார். இவரது பின்னணியை அறிந்த பலரும் அப்போது ஆச்சர்யத்தில் மூழ்குகிறார்கள்.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும், சாமர்த்தியமாகத் திருடுவதில் வல்லவர் மணியன்பிள்ளை. உயர்ந்த சுவர், 6 நாய்கள் என்று பலத்த பாதுகாப்போடு இருந்த ஒருவரின் வீட்டில் திருடிவிட்டு, அடுத்த நாள் மாட்டிக்கொள்கிறார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர், ‘வீட்டில் ஆறு நாய்கள் இருந்தும் எப்படித் திருடினாய். அதை மட்டும் சொல். வழக்கை வாபஸ் செய்துகொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். ‘உங்கள் வீட்டில் இருந்த மீன் குழம்பு சாப்பாட்டை நாய்களுக்கு வைத்து, அன்பாகத் தடவிக் கொடுத்தேன்’ என்று மணியன்பிள்ளை சொன்னதும் அவர் தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்.
‘ஒரு மனிதன் இப்படி வாழக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். என் வாழ்க்கையை யாரும் பின்பற்றக் கூடாது’ என்று மணியன்பிள்ளை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகத்தைத் தமிழில் ஜி.ஆர். இந்துகோபன் மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்தில் என்னை மிகவும் வசீகரித்த புத்தகம் இதுதான்!