இலக்கியம்

உள்ளது வாழ்வுதான்

பிரமிள்

விஞ்ஞானப் பார்வையின் மூலம் தென்படும் உலகம் இயந்திரத் தனமானது என்றோ, அதில் இதயபூர்வ மான தாட்சண்யங்கள் முதலியன இல்லை என்றோ முடிவு கொள்வது விஞ்ஞானப் பார்வையும் அல்ல, மனச்செழுமையுமல்ல.

ஏனெனில் விஞ்ஞானம் காட்டும் வாழ்வு ஒவ்வொரு ஜீவதாதுவுக்கும் ஒரு பிரத்யேக அக்கறையைத் தந்து, அதன் பிராந்தியத்தை அதற்கு ஒரு சவாலாகவும் அமைக்கிறது.

இந்தப் பரிவும் சவாலும் தாய் குழந்தைக்கு அளிக்கும் பராமரிப்புவரை, அதாவது உயிர்வாழ்வின் மிக நுண்ணிய உணர்வுத் தொடர்பு வரை நீடித்து இதையும் தாண்டி அபூர்வக் கவிகளின் தரிசனப் புதுமைகளையும் கூட மலர்விக்கிறது. அதாவது வெறும் ஜடம் என்று கொள்ளப்படக்கூடிய வஸ்து நிலையிலிருந்து மானுடனது உன்னத மனோநிகழ்ச்சிவரை, தொட்டு ஓடிவரும் ஒரே பரிமாணச் சங்கிலிப் பிணைப்பையே விஞ்ஞானப் பார்வையின் மூலமாகத் தென்படும் வாழ்வாக இங்கே கொள்கிறோம். மதிப்பீடுகளுக்கு இதை யன்றி எதை ஆதாரப்படுத்துவது நியாய மாகும்?

‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று குழந்தைக்குக் காட்டும் பூச்சாண்டி, இன்றைய பார்வையில் மனித மதிப்பீடு களுக்குக் களமாக முடியாது. இன்று நாம் அங்கீகரித்தாக வேண்டிய வாழ்வின் பல்வேறு வகையான நெகிழ்ச்சிகளைத் தான். அதாவது ஒருவனது பசியை அகற்றுவது பரலோக சாம்ராஜ்யத்துக்கு பாஸ்போர்ட் கிடைக்கும் என்பதற்காக அல்ல. ஏனெனில் உள்ளது வாழ்வுதான். அதன் நிகழ்கணம்தான்.

(கோவை ஞானி நடத்திய நிகழ் (மே 1990) இதழில் பிரமிள் எழுதிய ‘விஞ்ஞானமும் காலாதீதமும்’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

SCROLL FOR NEXT