இத்தாலியில் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியாகப் பிறந்து இந்தியாவுக்கு வந்து தமிழுக்குச் சேவைபுரிந்தவர் வீரமாமுனிவர்.
18-ம் நூற்றாண்டில் தமிழ் மொழியைச் செய்யுளின் பக்கமிருந்து உரைநடைக்குக் கொண்டுவந்தவர் அவர். இத்தனைக்கும் தனது 30-வது வயதுக்குப் பின்னர்தான் தமிழையே அவர் கற்றுக்கொண்டார். இலக்கியம், இலக்கணம், அகராதி என்று பல துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய காப்பியம் ‘தேம்பாவணி’. இயேசுவின் பெயரை ‘கனி எந்தை’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மற்ற பாத்திரங்களின் பெயரும் தமிழில்தான் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலுக்கு ரா.லே. ஆரோக்கியம் பிள்ளை, வி. மரிய அந்தோணி உட்பட பலர் உரை எழுதியிருக்கிறார்கள். இந்நூலுக்கு அருட்சகோதரி முனைவர் மார்கரெட் பாஸ்டின் எழுதிய உரையைச் சமீபத்தில் உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்துடன் வீரமாமுனிவர் பற்றிய ஆவணப்படமும் டிவிடி வடிவில் வழங்கப்படுகிறது.