என் பால்ய காலத்தின் பெரும் பகுதி திருநெல்வேலியின் ‘திருவள்ளுவர்’ நூலகத்தில்தான் கழிந்தது. என் அம்மாதான் இதற் கெல்லாம் காரணம்.
தெருவில் இறங்கி மற்ற பையன்களுடன் விளையாடினால், அடி பிரித்து எடுத்துவிடுவார். அந்த அச்சத்திலேயே நூலகத்தில் தஞ்சம் புகுந்தவன் நான்.
ஆனால், புத்தக வாசிப்பு என்பது ஒரு போதை. என்னை வெகு சீக்கிரமே வசீகரித்துவிட்டது. தினசரி நாளிதழ்கள் முதல் சிறுகதை, நாவல் என்று வாசிப்பு விரிவடைந்தது. ஒருமுறை என் அப்பா, ‘1001 அரேபிய இரவுகள்’ கதைப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தார்.
வாசிப்பில் மூழ்கியிருந்த என்னை வீட்டில் விட்டுவிட்டு அம்மா வெளியில் சென்றிருந்தார். அன்று பார்த்து, என்றோ என் பிஸ்கட்டைத் தின்ற நாய் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து விருந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டது. சமைத்த சாப்பாடு அத்தனையும் காலி. அன்று என் அம்மாவிடம் நான் பட்ட பாடு நாய் படாத பாடுதான்.
எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன். அவரது ‘ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிர்ரர்’ நாவலை என்னால் மறக்கவே முடியாது. தமிழில் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என்று அது ஒரு தனிப் பட்டியல். ‘ஆல் டைம் ஃபேவரைட்’ என்றால் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’தான்.
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள், ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை சரிதம் என்று பலதரப்பட்ட எழுத்துகளின் வாசகன் நான். நகைச்சுவை எழுத்துக்கு எனது ஆதர்சம், சோ. வாழ்க்கை மாற்றத்தில் இப்போதெல்லாம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் வாசிக்கத் தொடங்கிவிட்டால் அதே பழைய வாசகன்தான் நான்!