ஐ. ஜோப் தாமஸ் எழுதிய ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’ எனும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கி.மு. 500-க்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த பாறை ஓவியங்கள் முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான ஓவியக் காலவெளியில் நம்மை அழைத்துச் செல்லும் அற்புத நூல் இது. தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்களின் காலகட்டத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், சித்திரங்கள் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
கொஞ்சம் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு அந்தக் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. பெண்ணியம் தொடர்பான கவிதைகள் அவை. பெண் மொழியின் வேறு தளத்தில் நின்று அந்தக் கவிதைகள் பேசுகின்றன.
சுண்டல்
பாரதி பற்றிய விரிவான நினைவுக் குறிப்புகளை முதன்முதலில் எழுதியவர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு. கதை சொல்வதில் சமர்த்தர் என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர். 1926 முதல் 1934 வரை ‘சென்றுபோன நாட்கள்’ என்னும் தலைப்பில் 18 பத்திரிகையாளர்கள் பற்றி தொடர் எழுதினார். பிரிட்டிஷ் அரசால் பாரதியின் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது, இந்தத் தொடரில் பாரதி பற்றிய நெடும் கட்டுரையையும் எழுதியிருக்கிறார். பல ஆண்டுகளின் தேடலில் இந்தக் கட்டுரைத் தொடரைத் தொகுத்து அதே தலைப்பில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. துல்லியமான புதிய தகவல்கள் கொண்ட புத்தகம் இது.