“நாடுகளுக்கிடையே ஒரு வேலைப் பிரிவினை இருக்கிறது. சில நாடுகள் வெல்வதில் தேர்ச்சி பெற்றவை. வேறு சில தோற்பதில் தேர்ச்சி பெற்றவை. உலகத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியான லத்தீன் அமெரிக்காவின் மக்கள் தோற்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். மறுமலர்ச்சிக் கால ஐரோப்பியர்கள் கடல் கடந்து வந்து அமெரிக்க இந்தியரின் நாகரிகத்தின் குரல்வளையில் பற்களைப் பதித்த பழங்காலம் தொட்டு தோற்றுக்கொண்டே இருப்பவர்கள் நாங்கள்.”
இப்படித்தான் தொடங்குகிறது உருகுவே நாட்டு எழுத்தாளர் எடுவார்டோ கலியானோவின் ‘லத்தீன் அமெரிக்காவின் திறந்திருக்கும் ரத்த நாளங்கள்: ஐநூறு ஆண்டுகளாகச் சூறையாடப்பட்ட ஒரு கண்டத்தின் வரலாறு’.
ஐரோப்பியர்கள் ஆதிவாசிகளாகக் குகைகளுக்குள் இருந்த காலத்திலேயே நாகரிகத்தின் உச்சங்களைத் தொட்டவர்கள் மாய, இன்கா, அஸ்டெக் போன்ற இனக் குழுக்களைச் சேர்ந்த தென் அமெரிக்கப் பூர்வகுடியினர். ஆயிரக்கணக்கான தானிய வகைகளைப் பயிரிடும் திறனும், அற்புதமான கட்டிடக் கலையும் கொண்டிருந்த அம்மக்களின் வரலாறு 1492-ம் ஆண்டு ஸ்பானிய அரச குலத்தின் ஆசியுடன் கொலம்பஸ் வந்திறங்கியபோது சோகமாகிப்போனது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மூலதனம், தென் அமெரிக்காவில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும், வெள்ளியும், தாமிரமும், தகரமும், பயிர்களும், பழங்களும், நிலங்களும், செவ்விந்தியர்களின் உழைப்பும், உயிர்களும்தான். மேற்கத்திய நாகரிகத்தின் அபரிமிதமான வளர்ச்சி செவ்விந்தியர்களின் நாளங்களிலிருந்து பாய்ந்த உதிரத்தினால் விளைந்ததுதான்.
“எங்களுடைய தோல்வி எப்போதுமே மற்றவர்களின் வெற்றிப் பகட்டில் மறைந்து நிற்கிறது. சாம்ராஜ்யங்கள் மற்றும் அவற்றின் உள்ளூர் கங்காணிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்த்ததால், எங்களுடைய செல்வமே எங்களின் வறுமைக்குக் காரணமானது. காலனிய ரசவாதத்தில் தங்கமும் தகரமாகிவிடும். உணவும் விஷமாகும்” என்றார் கலியானோ.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோஷலிசச் சிந்தனைகள் பரவித் தன் மேலாதிக்கத்துக்கும் மூலதனக் கொள்கைக்கும் முற்றுப்புள்ளி விழுந்துவிடுமோ என்று அஞ்சிய அமெரிக்கா அந்நாடுகளில் ராணுவப் புரட்சிகளுக்குத் துணை நின்றது. உருகுவே நாட்டிலும் ராணுவம் அரசதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘மார்ச்சா’, ‘எபோக்கா’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகச் செயல்பட்டுவந்த கலியானோ கைதுசெய்யப்பட்டார். ராணுவ அரசு ‘ரத்தநாளங்’களைத் தடை செய்தது.
சிறையிலிருந்து தப்பிய கலியானோ அர்ஜெண்டினாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு ‘ரைசிங்’ என்ற கலாச்சார இதழைத் தொடங்கினார். அர்ஜெண்டினாவிலும் ராணுவப் புரட்சி நடந்தது. இடதுசாரி அறிவுஜீவிகள் மீது தாக்குதல் தொடங்கியது. ராணுவ அரசின் கொலைப் பட்டியலில் கலியானோவின் பெயரும் இருந்தது. தப்பிய கலியானோ கடல் கடந்து ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்தபடி லத்தீன் அமெரிக்கப் போராட்டங்களைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதினார். “லத்தீன் அமெரிக்காவை ஒரு பெண்ணாகக் கற்பனை செய்துகொண்டேன். அவள் தன் காதல் அனுபவங்களையும், தன் மீது நிகழ்ந்த பலாத்காரங்களையும் ரகசியமாக என் காதுகளில் சொன்னாள்” என்றார் கலியானோ.
1985-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் உருகுவே நாட்டின் ராணுவ அரசு மக்களின் ஆதரவை இழந்தவுடன் நாடு திரும்பிய கலியானோ உலகெங்கிலும் போராடும் மக்களின் பக்கமே நின்றார்.
இதழியல் அளித்த கொடை
“புனைவற்ற எழுத்தை (non-fiction narrative) இலக்கியத்தின் இருண்ட பக்கமாகப் பார்க்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. எழுதப்பட்ட எல்லாப் படைப்புகளும் – சுவர்க் கிறுக்கல்கள்கூட – இலக்கியம்தான். பல வருடங்களாக எழுதிவந்தாலும் பத்திரிகையாளனாகப் பயிற்சிபெற்ற என் எழுத்தில் அதன் முத்திரை இன்றும் இருக்கிறது. உலகத்தின் யதார்த்தங்களைப் பற்றி எனக்கு உணர்வேற்படுத்திய இதழியலுக்கு நான் நன்றியுடையவானாக இருப்பேன்” என்று அண்மையில் ஒரு நேர்காணலில் கலியானோ கூறினார். யதார்த்தத்தின் பயங்கரமும், அழகும், பைத்தியக்காரத்தனமும் எந்த ஒரு கவிஞனின் படைப்பையும் வென்றுவிடும் என்று நம்பினார் கலியானோ.
“எல்லா யதார்த்தங்களும் மந்திர சக்தி வாய்ந்தவைதான். வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இந்தப் புவிக் கோளம் முழுவதிலும் யதார்த்தம் எப்போதுமே ஆச்சரியங்களையும், புதிர்களையும் கொண்டது. ஆனால் நாம்தான் பல சமயங்களில் அவற்றை உணராதவர்களாக இருக்கிறோம். எழுதுவது அந்த மந்திரத்தை ஓரளவுக்காவது கைக்கொள்ள உதவுமென நினைக்கிறேன்.”
2009-ம் ஆண்டில் வெனிசுலாவின் அதிபர் ஹ்யூகோ சாவேஸ், ஒபாமாவைச் சந்தித்தபோது கலியானோவின் ‘ரத்தநாளங்கள்’ நூலைப் பரிசளித்தார். உலக ஊடகங்களின் முன் இது நடந்தது. அமேசானின் தரவரிசைப் பட்டியலில் 54,295-ம் இடத்திலிருந்த அப்புத்தகம் ஒரே நாளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
நாம் நாடு கடத்தப்பட்டவர்கள்
கலியானோ லத்தீன் அமெரிக்காவைப் பற்றி மட்டும் கவலைப்பட்டவரல்ல. “உலகம் ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கையில் சிக்கியுள்ளது. அவை ஒருசில நாடுகளுக்குச் சொந்தமானவை. மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். போர்ப் பொருளாதாரம், போர்க் கலாச்சரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உலகம் அமைக்கப்பட்டுள்ளது” என்ற உலகப் பார்வை அவருக்கிருந்தது. “இன்றைய உலகத்தையே மேலாதிக்கம் செய்யும் சக்தி, நம் சக மனிதர்களையே ஆபத்தானவர்களாகப் பார்க்க நமக்கு கற்றுக் கொடுக்கிறது. உலகத்தை ஓட்டப் பந்தயத் தடமாகவும், போர்க்களமாகவும் காணும் ஒரு முன்மாதிரியை ஏற்றுக்கொள்ளும்வரையில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் நாடு கடத்தப்பட்டவர்களாகவே இருப்போம். உலகத்தை இன்று கட்டுபாட்டில் வைத்திருப்பவர்கள் மனித சமூகத்தின் கூட்டு நினைவை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.”
நவீனத் தொழில்நுட்பத்தை கலியானோ எப்படிப் பார்த்தார்?
“இயந்திரங்களைப் பழி சொல்ல முடியாது. நாம் இயந்திரங்களின் வேலைக்காரர்களாகிவிட்டோம். இயந்திரங்களால் இயக்கப்படும் இயந்திரங்கள் நாம். புதிய தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்குச் சேவை புரிந்தால் நல்லதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிலைமை நேர்மாறானது. கார்கள் நம்மை ஓட்டுகின்றன. கணிணியின் மென்பொருட்கள் நம்மை எழுதுகின்றன. சூப்பர் மார்க்கெட்டுகள் நம்மை வாங்கிக்கொண்டிருக்கின்றன.”
கட்டுரையும் இலக்கியம்தான்
உலகம் முழுவதும் இன்று போராட்டத்தின் சின்னமாக இருக்கும் சே குவேராவின் இறுதி நிமிடங்களைப் பற்றி “மந்திரம் போன்ற வாழ்க்கைக்கு மந்திரம் போல் ஒரு முடிவு” (A Magic End to a Magic Life) என்று 1967-ல் ‘மந்த்லி ரெவ்யூ’ இதழில் கலியானோ எழுதிய கட்டுரையே ஒரு இலக்கியம்தான்.
“சே” இன்றும் “சே” வாகவே இருக்கிறார். அவர் ஒரு விடாப்பிடியான ஆசாமி. திரும்பத் திரும்பப் பிறந்துகொண்டிருக்கிறார். மரணமடைய மறுக்கிறார். ஏனென்றால் அவர் ஓர் அசாதாரணமான மனிதர். எண்ணியதைச் செய்வார். சொல்வதைச் செய்து முடிப்பார். இது அபூர்வம். நம் உலகத்தில் சொல்லும் செயலும் ஒரே வரிசையில் நிற்பதில்லை. அப்படி நின்றாலும் அரிதாகவே ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்கின்றன” என்று ஒரு நேர்காணலில் கலியானோ கூறினார்.
கலியானோவும் அப்படித்தான். ஏப்ரல் 13 அன்று புற்று நோய் காரணமாக உருகுவேயின் தலைநகரான மோண்டெவீடியோவில் 74-ம் வயதில் இறந்த கலியானோவுக்கு மரணமில்லை.
தோல்வி நிலையானதில்லை. வரலாற்றுத் தொடர்ச்சியில் அது ஒரு நிகழ்வு என்று நம்பிய கலியானோ அடிக்கடி சொல்வது இது: “வரலாறு எப்போதுமே குட்பை சொல்வதில்லை. அது மீண்டும் சந்திப்போம் (சீ யூ) என்றுதான் சொல்கிறது.”
மீண்டும் சந்திப்போம் கலியானோ!
கட்டுரையாளர், பிரண்ட்லைன் இதழின் ஆசிரியர், தொடர்புக்கு:vijay62@gmail.com