கவிதை தன் மொழியையும் வடிவத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால், கவிஞனையும் இயற்கையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இயற்கையின் பிரம்மாண்ட அழகும், களங்கமற்ற அதன் அமைதியும் காலங்காலமாகப் பாடுபொருளாகி வந்தாலும் இயற்கையைப் பாடுவதில் ஜென் கவிதைகள் புதிய வாசலைத் திறந்துவிட்டவை.
பழநிபாரதியின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஜென் கவிதைகளுக்குரிய கூறுகளைக் கொண்டிருப்பவை. பழநிபாரதியின் இலவம்பஞ்சு மொழி தமிழ் வாசகர்களை அழகான அனுபவத்துக்கு அழைத்துச்செல்கின்றன. தமிழ் வாசிப்புச் சூழலில் அரிதாகிவரும் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான நிலப்பரப்பிலிருந்து விரியும் காட்சிகள் வழியே ‘மெய்தேடல்’ உணர்வை முதல் வாசிப்பிலேயே சிலிர்ப்புடன் இந்தக் கவிதைகள் ஊட்டிவிடுபவை.
இருளில் மிதக்கிறது
வெளிச்சம்
மிதப்பதுதான்
வெளிச்சம்
என்ற வரிகள் வெளிச்சத்தின் அர்த்தத்தில் புது ஒளியைப் பாய்ச்சுகின்றன. வெளிச்சம் வாழ்க்கையை உருவகப்படுத்தும்போது வேறொரு தளத்துக்குக் கவிதை செல்கிறது. இயற்கையின் வழியே தன் கவிதை உலகை விரிக்கும் கவிஞன் அந்த இயற்கையை இழந்து நிற்கும்போது,
காடுகளை இழந்த
என் இதயத்தில்
ஒரு புலியைப் பச்சை குத்தியிருக்கிறேன்
என்ற ஏக்கமாக வெளிப்படுகிறது. முன்னுரையில் பிரபஞ்சன் உச்சிமுகர்வதைப் போல பழநிபாரதி இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ் நிலங்களின் கவிஞராகத் தன்னை அறியத் தருகிறார்.
சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்
பழநிபாரதி
விலை: ரூ 60, குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,
தி. நகர், சென்னை-17.
தொடர்புக்கு: 044-24353742.
- சொல்லாளன்