பிரிட்டிஷ் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் பிறந்து, முறையான கல்விப் பின்னணி இன்றி, பள்ளிக்கு வெளியே சமூகக் கல்வியையும் கற்று ஒரு கம்யூனிஸ்ட் போராளியாக மாறிய மருத்துவர் கோவி-யின் தன்வரலாற்று நூல் இது. 88 வயதான கோவி கேரளத்தில் பிறந்து கோவை வந்தவர். சிறுவயதில் ஆயுதப் போராளியாக இருந்த அனுபவங்களையும் இந்நூலில் குறிப்பிடுகிறார்.
ஆயுதப் போராட்டம் தொடர்பாகத் தற்போது அவருக்கு இருக்கும் கருத்து மாறுபாட்டையும் வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது. ஒரு மக்கள் மருத்துவராக அடித்தட்டு மக்களுக்கு சிகிச்சைகள் செய்த அனுபவங்களையும் சொல்கிறார். ஹோமியோபதி மற்றும் நாட்டுமருத்துவத்தின் சிறப்புகளைப் பேசும் அவர் தனது வாழ்வனுபவங்கள் வாயிலாக ஆங்கில மருத்துவத்தின் சில தேவைகளையும் அதே வேளையில் அது செய்யும் ஆதிக்கத்தையும் பேசுகிறார். கம்யூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கிய கோவி, தற்போது தமிழ்த் தேசிய அரசியலில் செயலாற்றிவருகிறார். தனது கம்யூனிஸ்ட் அரசியல் வாழ்க்கையில் சந்தித்த தோழர்களைப் பற்றி எழுதியிருக்கும் அனுபவங்கள் இன்றைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஒரு சுயவரலாற்று நூலுக்கான தொகுப்பு முறை இல்லாத நூலாக இருந்தாலும், சமூக மாற்றத்துக்காகப் பல தனிப்பட்ட தியாகங்களைச் சந்தித்த ஒரு போராளியின் நூலாக இந்த நூல் முக்கியமானது.
ஒரு புரட்சியாளனின் வாழும் நினைவுகள்
மருத்துவர் கோவி.
புதுப்புனல், பாத்திமா டவர் முதல்மாடி,
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை-5, தொடர்புக்கு: 9884427997
விலை: ரூ.200
- அழகு தெய்வானை