இறைத்தன்மை முன்னிலைப்படுத்தப்பட்டு கவியாளுமை பின்னுக்குத் தள்ளப்பட்ட காரணத்தால், தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப் படாதது போன்ற நிலை நம்மாழ்வாருக்கும் நேர்ந்துள்ளது. கவிஞர் நம்மாழ்வார் திரையிடப்பட்டுள்ளார்.
‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’
என இறைவிழைவும் மொழிக்குழைவும் சரிக்குச் சமம் விரவிப்பாடிய நம்மாழ்வார் வைணவச் சிமிழுக்குள் சிறைப்பட்டிருப்பது தமிழுலகுக்கும் தத்துவப் புலத்துக்கும் நேர்ந்துள்ள பேரவலம். அகவுணர்வை அச்சுப்பிசகாமல் ஆற்றொழுக்காய் அள்ளித்தெளிக்கும் திருவாய் மொழிப் பாசுரங்கள், வைணவக் கருவூலமாய் எழுந்த வியாக்கியானங்களுக்கான அவசியத்தைத் தோற்றுவித்தன. 92 வயது வரை வாழ்ந்த காஞ்சி மகா வித்வான் பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி, ஆழ்வார் பாசுரங் களுக்கு சமர்ப்பித்த உரையான ‘திவ்ய பிரபந்த திவ்யார்த்த தீபிகை’ பெரிதும் பேசப்படுவது.
சங்க இலக்கியத்தின் சாயல்
மரபு வழித் தமிழ் இலக்கியத்தின் விரிவும் ஆழமும் அனுபவச் செழுமையும் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு வடிவ நேர்த்தி வந்தன. விரிந்த உலகும், சிவன்-நான்முகன் உள்ளிட்ட தேவர்களும், பேரண்டமான பிரபஞ்சமும் நாராயணனில் அடக்கம் எனப் பொருள் விரியும் திருவாசிரியப்(2584) பாடலில் சங்க இலக்கியச் சாயலை முழுமையாக உணரலாம்.
‘நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவரும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெருமா மாயனை அல்லதொரு மாதெய்வம்
மற்று உடையமோ யாமே?
அந்தாதி இலக்கியம்
தொண்ணூறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகத் தமிழில் எழுந்த மிகப்பெரிய அந்தாதி இலக்கியம் ‘திருவாய்மொழி’. ஒரு செய்யுளின் முடிவு அடுத்த செய்யுளின் தொடக்கம். நம்மாழ்வாரைப் பெருமைப்படுத்தி, அவருடைய புகழ் நிலைக்கப் போராடிய ‘ஆசார்ய இருதயம்’ என்கிற வைணவத் திறனாய்வு நூலை எழுதிய வைணவ ஆசார்யர்களில் கடைசி ஆசார்யரான மணவாள மாமுனிகள் நம்மாழ்வாரின் நிலையை ‘ஞானத்தில் தன் பேச்சு. பிரேமத்தில் பெண் பேச்சு’ என விவரிக்கிறார். நம்மாழ்வாரே ஈண்டு பராங்குச நாயகி. ஆன்மிக வளர்ச்சியின் படிநிலைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்பைத் திருவாய்மொழி அகப்பாடல்களாய், நாயகன்-நாயகி பாவனையில் புலப்படுத்துகிறது.
உண்ணும் சோறு, பருகு நீர்
தின்னும் வெற்றிலையும்; எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று
என்றே, கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம்
மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இள மான் புகும்
ஊர் திருக்கோளூரே
தலைவியைக் குறித்து தாய இரங்கும் இந்தத் திருவாய்மொழிப் பாசுரம் இலக்கிய மேடைகளில் தவறாமல் கையாளப்படுகிறது. நாயகன்-நாயகி பாவ உத்தி நம்மாழ்வாரின் தனிச்சீர்மை. தோழி-தாய்-தலைவி என மூவரில் ஒருவர் தன்மையை அடைந்து பாடும் இந்த அகப்பொருள் உத்தியில் 27 திருமொழிகளைப் பாடியுள்ளார்.
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள
நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து
என் நெஞ்சை உருக்குங்களே
இந்தப் பாசுரம் நம்மாழ்வாரை மும்முறை மூர்ச்சை அடைய வைத்ததாம்.
திருக்குருகூர் என அழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தன்று அவதரித்ததாகக் கருதப்படும் நம்மாழ்வாரின் பிறப்பும் வளர்ப்பும் தெளிவாக இல்லை. முதல் 16 ஆண்டுகள் திருக்குருகூர் பொலிந்து நின்றபிரான் சந்நிதியிலிருந்த, இரவில் மூடிக்கொள்ளாத இலைகளை உடைய திருப்புளியாழ்வார் எனப்படும் உறங்காப்புளி மரப்பொந்தில் அமர்ந்தபடி ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட நம்மாழ்வார் 35 வயதுவரை வாழ்ந்திருக்கலாம்.
மதுர கவியுடன் சந்திப்பு
நம்மாழ்வாரின் வரலாற்றில் முக்கியமான இடம் மதுரகவி ஆழ்வாருடனான சந்திப்பு. ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’(உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என்று மதுரகவி கேட்க, ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’(அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்கிறார் நம்மாழ்வார். இக்கருத்து ‘தானே ஆகி’ (10:7:2) எனத் துவங்கும் திருவாய்மொழிப் பாசுரத்தில் துலக்கம் பெறுகிறது.
பறவைகளைத் தூதுவிடும் பராங்குச நாயகி அவற்றுக்குப் பொன்னுலகான பரமபதத்தையும், பூவுலகையும் ஆளும் பேறு கிடைக்கச் செய்வதாகப் பாடுகிறார். ‘அர்த்த பஞ்சமம்’ என இறையின் தன்மை, உயிரின் தன்மை, இறைவன் வழங்கும் அருளின் தன்மை, இடையில் ஏற்படும் தடைகள், இறுதியில் கிட்டும் இன்பம் எனப் பக்திப் பனுவலாக நம்மாழ்வார் பாடினாலும் அவர் கைக்கொண்ட அழகுத் தமிழும், தத்துவச் செழுமையும் மெய்யன்பும் வாசிப்போரை வசப்படுத்திப் பறவைகளாக்குகின்றன. இவ் வாறு பறவைகள் ஆவோருக்குப் பொன் உலகும் தேவையில்லை. புவனம் முழுவதும் தேவை யில்லை. நம்மாழ்வாரின் தமிழ் ஒன்றே போதும்.