ஒரு பறவை பாடுவது, அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல, அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே அது பாடுகிறது
- மாயா ஏஞ்சலோ
மே 28-ம் தேதி தனது 86வது வயதில் மாயா எஞ்சலோ இறந்தபோது, அவரது பாடல் சொர்க்கத்தை நோக்கி வீசியெறிப்பட்டதாகவும் அது தொடர்ந்து ஒலிக்கும் என்றும் சொன்னார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.“அவர் ஒரு புதிய விடியலை உருவாக்கினார், அதை நாம் கொண்டாட வேண்டும்” என்றார்.
அமெரிக்காவின் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ இறக்கும் போது உலகமே கொண்டாடிய ஒரு கானமாக, அவரது கவிதை கொண்டாடிய அதிசயப் பெண்ணாக, அவர் விரும்பியது போலவே பலரது வானங்களில் ஒரு வானவில்லாக மின்னி மறைந்தார்.
ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை நோக்கிய மாயாவின் பயணம் வலி நிறைந்ததும் அசாதாரணமானதுமான ஒரு பயணமாகும்.
அவரது சிறு வயதிலேயே பெற்றோர் பிரிந்துவிட, பாட்டியின் பராமரிப்பில் அர்கன்ஸாஸ் மாநிலத்தில் வளர்ந்தார் மாயா. அங்கு இன வெறுப்பின் கோர முகத்தைக் கறுப்பினப் பெண்ணான மாயா நேரடியாக எதிர்கொண்டார். தாயைப் பார்க்கச் சென்ற ஒரு பொழுதில் தாயின் நண்பராலேயே பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கப்பட்ட பின் அதிர்ச்சியில் பல வருடங்கள் பேசும் திறனை இழந்திருந்தார். பின்னாளில் மிகச் சிறந்த பாடகியாக உருவெடுத்திருந்தார் மாயா எஞ்செலோ.
இளம் பருவத்தில்
ஒரு குறுகிய காலக் காதலின் விளைவாக 1944-ல் 16 வயதிலேயே தாயாகிவிட்ட மாயா, தன்னையும் தனது மகனையும் கவனித்துக்கொள்ள பல விதமான பணிகளை மேற்கொண்டார். பின்னர் 1952-ல் அனஸ்டசியோஸ் ஏஞ்சலோபுலோஸ் என்கிற கிரேக்க மாலுமியை திருமணம் செய்துகொண்டார். ஒரு கலைஞராக மாயாவின் திறமைகள் உரிய அங்கீகாரத்தைப் பெற்றன. பல நாடகங்களில் அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அதே காலகட்டத்தில் தனது முதல் ஆல்பத்தையும் வெளியிட்டார். இரவு விடுதிகளில் நடனமாடுபவராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
1960களில் ஒரு நண்பரின் ஆலோசனையை ஏற்றுத் தனது சுயசரிதையை எழுத தொடங்கினார். 17 வயது வரையிலான தனது வாழ்வைப் பதிவு செய்த அந்த சுயசரிதைதான் - அவர் பின்னர் பல சுயசரிதைகளையும் பல கவிதை கட்டுரை தொகுப்புகளையும் எழுதிய போதும் கூட மாயாவின் மகத்தான புத்தகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்று எனக்கு தெரியும்’ (why the caged bird sings) என்று பெயரிடப்பட்ட அந்த சுயசரிதை ஒரு கறுப்பினப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வை, அதன் குரூரங்களை அரசியல் தளத்தில் வைத்து வெளிப்படையாகப் பேசிய முதல் புத்தகம். உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய அடையாளமாக அந்தப் புத்தகத்தின் வழியாக மாயா உருவானார் என்பதில் ஆச்சரியமெதுவுமில்லை.
உலகம் முழுவதும் வாசகர்கள்
மாயாவின் பல கவிதைகள் ஒடுக்கப்பட்ட பெண்ணின் வலிகளையும் எதிர்ப்புணர்வையும் ஒருசேர நுட்பத்துடனும் எளிமையுடனும் பேசிய கவிதைகளாக வெளிப்பட்டன. மாயாவிற்காக உலகெங்கிலும் குவிந்த இரங்கல் குறிப்புகளில் வாஷிங்கடனைச் சேர்ந்த ஏரியல் கெயின்ஸ் சொல்லியிருப்பது இதைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. “எனது கறுப்புருவத்தை, எனது பெண்மையை எப்படிக் கொண்டாடுவது என்பதை மாயாவிடமிருந்தும் எனது அம்மாவிடமிருந்தும்தான் கற்றுக் கொண்டேன், அதன் மூலமாக விழுந்த பிறகு எப்படி எழுந்துகொள்வது என்பதையும்” என்கிறார் அவர்.
மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற போராளிகளோடு நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப்பெற்ற மாயா அவர்களது போராட்டங்களிலும் பங்கு கொண்டார். மாயா பிறந்த ஏப்ரல் 4-ம் தேதி அன்று மார்டின் லூதர் கிங் இறந்ததால் அவர் பல வருடங்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருந்தார்.
சாமானியர்களைத் தீண்டிய கவிஞர்
ஒரு கவிஞராக, கலைஞராக அவர் சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படித் தீண்டினார் என்பதற்கு ‘கார்டியன்' இதழில் வெளியாகியிருக்கும் சோபியா என்கிற வாசகியின் இரங்கல் குறிப்பு அற்புத உதாரணம். “1990-களில் லிவர்பூலில் ஒரு நாடகத்தில்தான் நான் அவரைப் பார்த்தேன். அந்த இரவு அந்த அரங்கத்திற்குள் செல்லவே மிகவும் தயங்கினேன். கடுமையான மன அழுத்தத்தில் மிகவும் சோகமான மனநிலையில் அப்போது நான் இருந்தேன். தனியாகத்தான் இருந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை அந்த அரங்கத்திற்குள் உந்தித் தள்ளியது. மேடையிலிருந்து மூன்றாவது வரிசையில் நான் அமர்ந்தேன். ஏதோ ஒரு தருணத்தில் மிகவும் உன்னதமான ஒரு உடல்மொழியோடு அவர் என்னை நேரடியாகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னார்: “உன்னை நீயே நேசிக்கவில்லை என்றால் மற்றவர்களை எப்படி நேசிப்பாய்? நிர்வாணமாக நிற்கும் ஒருவன் உனக்குச் சட்டையை பரிசளித்தால் அவனை நம்புவாயா?” என்று கேட்டார். அந்த இரவில் அவர் எனது வாழ்க்கையை மாற்றினார்.”
மாயா ஏஞ்சலோ மறைந்திருக்கிறார். கூண்டிலிருந்து தன்னையும் தன்னைப்போல பல்லாயிரக்கணக்கானவரையும் விடுவித்த அந்தப் பாடல் ஒடுக்கப்பட்டவர்களின் சுதந்திர வெளிச்சமாக உலகெங்கும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
நான் கற்றுக்கொண்டேன்
திறந்த மனத்துடன் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் அதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். பல வலிகள் இருக்கும் போதும் வலியே இல்லாது போல் இருக்கத் தெரிந்துகொண்டேன். மனிதர்கள் இதமான தழுவலை விரும்புகிறார்கள். அல்லது நட்பார்த்தமான தட்டிக்கொடுத்தலுக்காவது ஆசைப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மனிதர்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்! ஆனால் அவர்களை எப்படி உணரச்செய்தீர்கள் என்பதை எப்போதும் மறக்கவே மாட்டார்கள் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.