சொல் பின்னால் வந்தது. அதற்கு முந்திய நிலைக்குப் போகப் பார்க்கிறது கூத்து. அது அதன் கலப்படமற்ற ஆரம்ப நிலைக்குப் போகப் பார்க்கிறது. சொல்லின்றியே தொடர்பு கொள்ளப்பார்க்கிறது. இது சொல்லில்லாத மிகப் பழைய இறந்த காலத்திற்குப் போவதில்லை. நிரந்தர நிகழ்காலத்தில் சொல்லைத் தாண்டி மனதை நிலைகொள்ளச் செய்வது இது. இது ஆதிமனிதனின் இழந்த சக்திகளைத் திரும்பப் பெறப் பார்ப்பது. உள்ளுணர்வை விழிக்கச் செய்து தொடர்புகொள்வது.
புதிதாய்க் கற்றவற்றில் உண்மையானதைப் பற்றிக் கொள்ளப்பார்ப்பது. உள்ளுணர்வை விழிக்கச் செய்து தொடர்புகொள்வது. புதிதாய்க் கற்றவற்றில் உண்மையானதைப் பற்றிக் கொள்ளப் பார்ப்பது. மனிதனை மிருகநிலையில் இருந்து விடுவிப்பது. இவைதானே கண்டுபிடித்து உணரும் செயல்கள். சொல்லுக்கு அடங்காத உணர்வுகள். உண்மை அலுப்பைத் தந்து மனிதனுக்கு பார்வை சோர்வதால் இல்லாததாகி விடுமோ? அலுக்காதவர்கள் உண்மைநாடிகள் செய்யும் காரியங்கள் இவை. தியேட்டர் என்பது மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிப்பதும்தான். அணிந்திருக்கும் முகமூடிகளைக் கழட்டிப் போட்டுக்கொண்டே போய் உண்மைச் சொரூபத்தைக் காண்பது கூத்து.
இது இழந்தகாலத்தை நினைவுகூரும் வருத்தம் தோய்ந்த பழைய கதை இல்லை. இது நிகழ்காலம். இது கண் முன் நிகழும் நிரந்தர நிகழ்காலப் படிமம். கூத்து பல உத்திகளின் தொகுப்பில்லை. அதுவே முழு உத்தி.
(தெருக்கூத்தைத் தமிழர்களின் பாரம்பரிய தியேட்டர் என்று வலியுறுத்திய ந.முத்துசாமி கூத்தை அறிமுகப்படுத்தி கசடதபற அக்டோபர் 1972 இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே வெளியிடப்படுகிறது.)