கூத்துப்பட்டறை நிறுவனரும் எழுத்தாளருமான ந.முத்துசாமி எழுதி அரங்கேற்றிய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று படுகளம். ந.முத்துசாமியின் புதல்வரும், அவருடைய நாடக இயக்கத்தில் பங்கேற்றவருமான ஓவியர் மு.நடேஷ், அந்த நாடகத்தை தன்னுடைய இயக்கத்தில் புதிய வடிவில் மார்ச் ஒன்றாம் தேதி மீண்டும் அரங்கேற்றினார்.
தமிழ்நாட்டின் வடபகுதியில், துரியோதனன் வதத்தை முன்வைத்து கிராமச்சடங்காக நிகழ்த்தப்படும் படுகளம் நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நவீன நாடகம் இது. மகாபாரத காலத்துக்கும்,நிகழ்காலத்துக்கும் இடையிலான உரையாடலாக இந்த நாடகத்தைப் பார்க்கலாம். மகாபாரதத்தின் 18-ம் நாள் போராட்டக் களனாக வடிவம் கொண்டு அன்றைய நிகழ்வுகளைப் பின்பற்றிச் செல்லும் நாடகம் இது. திரெளபதியின் துகிலுரிப்பு, கற்புநிலை, பெண்ணுடல், கொண்டாட்டம், சண்டைகளை முன்வைத்து பாத்திரங்களின் உரையாடல்கள் சமகாலத்துக்குக் கொண்டுவருகின்றன. கூத்திசைத்தும், ஆடியும், ஓடியும் நாடகத்தைப் பல தளங்களுக்கு நகர்த்தினார்கள் நடிகர்கள். நடிகர்களும் சாதாரண உடையமைப்புடன் கடந்த காலத்தைச் சமகாலத்துக்கு இழுத்து வரும் முனைப்பு கொண்டிருந்தனர்.
நாடகத்தில் நன்மை, தீமை என்பவற்றிற்கிடையிலான மெல்லிய இழைகளும், சார்புகளும் இடம்பெயர்ந்தவண்ணம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. பீமனுக்கு வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக மாலை விழும்போது, துரியோதனனுக்கு மூலக்கடை சார்பாக மாலை விழுகிறது. மனிதர்களின் பல்வேறு முகங்கள், சஞ்சல குணங்கள் மற்றும் முரண்கள் வெளிப்பட்டவாறு உள்ளன. பாஞ்சாலி கூந்தல் முடித்து சபதம் முடிக்கும் போது பானுமதியின் கூந்தல் அவிழ்தலும் என நாடகம் பல முரண்களுக்குள் பயணிக்கிறது.
துரியோதனன் கொலைக்காக பீமன் போலீசால் கைதுசெய்யப்படுவதாக நாடகம் முடியும்போது பாத்திரங்கள் முழுமையாகச் சமகாலத்தில் உறைகின்றன.
நாடகம் முழுவதும் நடிகர்கள் தாங்கள் தாங்கிய பாத்திரங்களைக் கடந்து அப்படிமங்களின் பல்வேறு நீட்சிகளாய் வடிவம் கொண்டனர். பாத்திரங்களைச் சமகாலத்துக்குக் கொண்டுவந்து மதிப்பீடுகளின் இறுக்கம் மற்றும் நெகிழ்வுக்கான ஊடாட்டமாக அமைந்த இந்த நாடகம் ஒரு புதிய படைப்பு முயற்சியாகவே தோற்றமளித்தது.இந்தப் புதிய வடிவமைப்புக்கு கருணாபிரசாத், நெல்லை மணிகண்டன் ஆகியோரின் பங்களிப்பும் துணைநின்றது.