வலைதளங்களின் சிறப்பே தகவல்களை அறிவதற்காக நேரத்தையும் உழைப்பையும் அதிகப்படியாகச் செலவழிக்கத் தேவையில்லை என்பதுதான். இன்னும் வசதியாக, இப்போதெல்லாம் செல்பேசியிலேயே தங்கள் ஆதர்ச எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க வசதியாக நிறைய வலைதளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், சென்னை நூலகம் டாட் காம் (>http://www.chennailibrary.com).
2006 முதல் இயங்கிவரும் இந்த வலைதளம், தமிழ் நூல்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. பாரதியார், பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம் என்று பலருடைய படைப்புகளை இணையத்திலேயே படித்துக்கொள்ளலாம். மேலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம் என்று தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்களுக்குத் தேவையான பொக்கிஷங்களும் கிடைக்கின்றன.