தணிக்கை முறைகள் காரணமாக கலை இலக்கிய நடவடிக்கைகள் இன்னமும் பெருவீச்சுடன் வெளிப்பாடு கொள்ளவில்லை. இருப்பினும் இச்சூழலில் காத்திரமாகச் செயல்பட்டு தம் குரல்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் கலை இலக்கியவாதிகள் இருபத்தியொரு பேரை அறிமுகம் செய்யும் ‘நவீன அரபு இலக்கியம்’ நூலை எச்.பீர்முஹம்மது தந்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற நஜிப் மஹ்பூஸ், அரசியல் போராளியும் கவிஞருமான மஹ்மூத் தர்வீஸ், வளமான கவிதைகளை தந்துள்ள அதோனிஸ் என்று தொடங்கி ஈராக்கின் மலாய்க்கா வரை கவிதை/சிறுகதை/நாவல்/திரைப்படம் எனப் பங்களித்து வரும் ஆளுமைகள் இங்கே பேசப்படுகின்றனர்.
காலூன்ற இடமின்றி, செயல்பட சூழலின்றி, வெளிப்படுத்த அவகாசம் இல்லாத நிலையிலும் இவர்களில் பெரும்பாலானோர் தம் தார்மிக குரலை உரத்து ஒலித்துகொண்டிருந்தவர்கள் மற்றும் ஒலித்துக்கொண்டிருப்பவர்கள். இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்த நாடோடி அரபிகளிடம் பாடல்வகை செல்வாக்கோடு இருந்ததைக் சுட்டிக்காட்டுவதும், குர் ஆன் வாயிலாக அது தொடர்வதும், கூடவே நவீன இலக்கிய வடிவங்களில் வெளிப்பாடுகள் பெறுவதுமான ஓர் இலக்கிய வரலாற்றை மதிப்பீடு செய்யும் பீர்முஹம்மது அங்காங்கே படிமங்கள் செறிந்த இலக்கிய வாக்கியங்களுடன் படைப்பூக்கமிக்க நாவல் ஆசிரியராக விளங்குகிறார். அரபு மரபை பரிசீலிக்கக் தொடங்கும்போது ஒட்டகத்தின் ஒவ்வொரு அடியும் கவிதைக்கான வார்த்தையை வரைந்து விட்டுச்சென்றது. ஒட்டகம் கோதிவிட்ட ஒவ்வொரு மணல் கூட்டமும் கடல் அலையை மறு உருவாக்கம் செய்தது என்றும், அதனை முடிக்கும் தருவாயில் “பாலைவனத்தின் ஒரு வழித்தடத்தில் ஒட்டகங்கள் அணிவகுத்து செல்லும் போது வார்த்தைகள் மணல் வெளியிலிருந்து அதன் வயிற்றின் மீது படர்ந்து செல்கின்றன.”
“நாவல் என்பதை மொழி உருவாக்கும் சமூக பிரக்ஞை” என்ற டெர்ரி ஈகிள்டனின் மேற்கோளுடன், எலியாஸ் கவுர் என்னும் லெபனானைச் சேர்ந்த எழுத்தாளரை பேசத்தொடங்கும் பீர்முஹம்மது எலியாஸ் கவுரின் தேசியவாதத்தையும், பாலஸ்தீன் ஆதரவு நிலையையும் குறிப்பிட்டு, அரபு இலக்கியத்தின் பொதுப்போக்கான தன்மைகளை விவரிக்கிறார்.
“நாடு கடத்தல் , இடப்பெயர்வு சகமனிதனுக்குள் ஏற்படுத்தும் வலிகள், விகசனங்கள் முக்கியமானவை. கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டவை. அரபு இலக்கியங்கள் பெரும்பாலும் இந்த வெளிப்பாடுகளுக்கான முன்முடிவை தருபவை. வாழ்க்கை சார்ந்த நெருக்கடியான அனுபவங்கள், தனித்துவத்தின் வித்தியாசங்கள் இவற்றின் கூடலில் இருந்து தப்பிக்க இயல்வதன் தெறிப்புகளாக அரபு எழுத்துலகம் அமைந்திருக்கிறது” (பக் 71)
இருநூற்றாண்டு அரபு புலம்பெயர் இலக்கியத்தின் அடையாளம் என்று எட்வர்த் செய்த்தால் புகழப்படும் எலியாஸ் கவுரின் மொழியானது படைப்பின் எல்லைகளைக் கலைத்து, புதிய அடையாளங்களை தோற்றுவிக்கிறது. லெபனான் மற்றும் பாலஸ்தீனின் அரசியலையும், கலாசாரத்தையும் பிரிக்க முடியாது என்று கூறும் கவுர் அதன் காரணத்தை இப்படி விளக்குகிறார். “ஒவ்வொன்றுமே அரசியல் செயற்பாட்டை நோக்கியும், மறு சிந்தனையை நோக்கியும் சென்று கொண்டிருக்கின்றன. இங்கு யாருமே எனக்குள் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது. இங்கு ஐரோப்பிய அறிவுஜீவிகள் சொன்னது போன்று மார்க்சியத்திற்கு எதிரான படைப்புகள் எல்லாம் இலக்கியம் எனவும், அதற்கு ஆதரவானது எல்லாம் அரசியல் என்றும் சொல்ல முடியாது. உண்மையில் அவை இரண்டுமே அரசியல் படைப்புகள்தான். சமூகங்கள் தன் நிலையில் மாற்றமடையும்போது இவற்றை தெளிவாக பிரிக்க முடியாது (பக் 77)
இந்நூலில் உள்ள நேர்காணல்களில் அதோனிஸினுடையது முக்கியமானது. அரசியலை, கவிதையை, சூபி மரபை எப்படி நோக்குவது, எழுத்தில் எப்படி அதனை ஒன்றிணைப்பது என்பது பற்றியெல்லாம் அற்புதமாகப் பேசுகிறார். நாடு நீங்கிய சூழலையும் இதில் சேர்த்துக்கொள்வது இன்னும் ஆச்சரியமானது.
பாலஸ்தீன் கவிஞரும் அரசியல் போராளியுமான தர்வீஷ் பற்றிய அறிமுகமும் கவிதைகளும் சிறப்பாக உள்ளன. எகிப்திய நாவலாசிரியான நஜிப் மஹ்பூஸின் அரேபிய இரவுகளும், பகல்களும் நாவல் ஆயிரத்தோர் இரவுகள் கதைகளின் மறு எழுத்தாக்கமாகும். இப்னு பதூதாவின் பயணங்களை The Journey of Ibn Fathouma என்று நாவலாக மறு எழுத்தாக்கம் செய்யும் மஹ்பூஸ் “இஸ்லாம் இன்று மசூதிகளில் தங்கி இருக்கிறது. அவற்றைத் தாண்டி வெளி உலகை சென்றடையவில்லை” என்றார்.
அவ்வகையில் நவீன அரபு இலக்கிய படைப்பாளிகள் பற்றிய விரிவான, ஆழமான அறிமுகத்தைத் தரும் எச்.பீர்முஹம்மதின் நவீன அரபு இலக்கியம் என்ற இந்த நூலை தமிழில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
- கட்டுரையாளர், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்