சா. ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் அடவி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘கோடையில் ஒரு மழை’ சிறுகதைத் தொகுப்பைத்தான் தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்தலின் துயரம், சந்தோஷம், அவலம் ஆகியவற்றைப் பேசும் கதைகள் அவை. குறிப்பாக, ‘கோடையில் ஒரு மழை’ என்ற கொரியக் கதையிலிருந்து வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்பதை நான் உணர்ந்த தருணம் அற்புதமானது. படித்து முடித்த புத்தகத்தையே உடனடியாக மறுபடியும் படிப்பதென்பது அபூர்வம். இந்தப் புத்தகத்தை அப்படிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
குடமுருட்டி ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள பாடல் பெற்ற வைணவ, சைவக் கோயில்களைப் பற்றிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக, பறவைகளும் விலங்குகளும் மோட்சம் பெற்ற திருத்தலங்களைப் பற்றி எழுதுகிறேன். அது தவிர, குடமுருட்டி ஆற்றங்கரைப் பகுதியைச் சேர்ந்த கதாகாலட்சேபக்காரர்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் திட்டமும் இருக்கிறது.
சுண்டல்
முக்கியமாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என்று புதிய வாசகருக்கு அறிமுகம் செய்யும் பணியில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஈடுபட்டிருக்கிறது ‘புத்தகங்களைத் தேடி’ எனும் பெயரில் இயங்கும் ‘ஃபேஸ்புக் கம்யூனிட்டி’ தளம். எந்தப் புண்ணியவான்(கள்) என்று தெரியவில்லை;
வைரமுத்து முதல் மார்க்வெஸ் வரை வகைவகையான படைப்புகளைப் பற்றிய குறிப்புகளை, (புத்தகங்களின் அட்டைப்படங்களுடன்) பதிவிட்டிருக்கிறார்(கள்). ‘வாழ்வில் தவறவிடக் கூடாத சிறந்த தமிழ்ப் புத்தகங்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் ஒரு சிறிய முயற்சி’ என்ற நிலைத்தகவலுடன் இயங்கிவரும் இந்தத் தளம், புதிய வாசகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், ஏற்கெனவே வாசித்த புத்தகங்களை மீண்டும் நினைவூட்டவும் உதவுகிறது.