தமிழ்த் திரையுலகின் வரலாற்றை எழுத முற்படும் எவரும் ஏவி. எம் நிறுவனத்தின் பங்களிப்பையும் அதன் சாதனைகளையும் புறந்தள்ள முடியாது. எல்லா இந்திய மொழிகளிலும் சேர்த்து 150-க்கும் அதிகமான படங்களைத் தயாரித்த அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏவி. மெய்யப்பன் தனித்துவம் மிக்க முன்னோடி. அன்று சினிமாவைப் புதிய தொழிலாகக் கைக்கொண்ட அவரைப் பற்றியும், அதை வெகுவிரைவாக வெற்றிகரமான தொழிலாக மாற்றிக் காட்டிய அவரது ஆற்றல் மிக்க நிர்வாகத் திறன்பற்றியும் ஏற்கெனவே பல புத்தகங்கள் பேசியிருக்கின்றன.
ஆனால், இந்தப் புத்தகம் ஒரு நேரடியான சாட்சியமாக சுவைபடப் பதிவாகியிருக்கிறது. ஏவி. மெய்யப்பனின் மகன் ஏவி. எம். குமரன்தான் இந்த நூலின் ஆசிரியர். ஒவ்வொரு படத் தயாரிப்பிலும் மெய்யப்பனின் திட்டமிடல், திடீரெனத் தோன்றும் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டு சமாளித்த விதம், அப்போது அவர் காட்டிய மன உறுதி, பொறுப்புகளை பிரித்துக் கொடுத்து கண்காணிக்கும் தேர்ச்சி என்று தந்தையாரின் அருகிலிருந்து ஒவ்வொன்றையும் துல்லியமாக கவனித்துக் கற்றுக்கொண்டவற்றை எளிமையான, அதேநேரம் சுவை குன்றாத நடையில் அளித்திருக்கிறார் குமரன்.
திரையுலகைப் பற்றி எதுவும் தெரியாமல் அதில் வெற்றிகாண நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல, நிர்வாக மேலாண்மையில் வெல்ல நினைப்பவர்கள், காலத்தில் பின்னோக்கிப் பயணித்து முழ்க நினைப்பவர்கள் என அனைத்து வகை வாசகர்களையும் ஏமாற்றாத புத்தகம்.
ஏவி. எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
நூலாசிரியர்: ஏவி.எம். குமரன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே. நகர் மேற்கு,
சென்னை-79.
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-65157525
- சொல்லாளன்