தமிழக ஓவியங்கள் 1350-1650 என்ற தலைப்பில் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வுப் படிப்பில் உருவாக்கிய நூலை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் ஓவியப் பாரம்பரியம் குறித்த முழுமையான நூல் என்று இதைச் சொல்ல இயலும்.
தமிழகத்தில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது என்று சொல்லி, அதற்கான தரவுகளையும் ஆதாரமாகத் தருகிறார் ஆசிரியர். தமிழகப் பாறை ஓவியங்கள், பழந்தமிழர் ஓவியங்கள், பல்லவர் கால ஓவியங்கள் முதல் காலனிய கால ஓவியங்கள் வரை இந்த நூலில் பேசுபொருளாகியுள்ளன. சமீபத்தில் கோவில் புனரமைப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்ட அரிய சுவரோவியங்களும் இந்நூலில் வண்ணப் புகைப்படத் தொகுப்பாக உள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
தமிழக ஓவியங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவந்த சமூக, வரலாற்றுப் பின்னணிகளையும் இந்த நூல் ஆய்வுப் பூர்வமாகப் பேசுகிறது. அதிகம் தெரியாத காலனி கால ஓவியங்கள்பற்றியும் அதன் பண்பாட்டுத் தாக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு நல்ல கலைவரலாற்று நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த நூலை நேர்த்தியாகப் பதிப்பித்துள்ளது காலச்சுவடு.
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
ஐ. ஜோசப் தாமஸ்
தமிழில்: ஏஞ்சலினா பாமா பால்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629 001
விலை: ரூ.475
தொடர்புக்கு: 04652-278525
- வினு பவித்ரா