நாகிப் மாஃபஸ் எழுதிய ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ (தமிழில்: சா. தேவதாஸ்) நாவலையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆயிரத்தோரு இரவுகளின் கதை மரபுகளின் நீட்சியாகத் தற்கால அரசியல் சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் இது. இவை தவிர, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட வங்கதேச வலைப்பதிவர் அவிஜித் ராயின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
2000-க்குப் பிறகு வெளிவந்த நவீனத்துவம் தாண்டிய கவிதைப் போக்குகள்குறித்த கட்டுரைத் தொகுப்பாக, ‘மாயக்குருவியின் அதிகாலை: பின்காலனிய கவிதை விமர்சனம்’ எனும் நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். தென் திருவாங்கூர் பண்பாட்டுச் சூழலில் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்த முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் அடிப்படையில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சுண்டல்
1981-ல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 2011-ல் ஜெயலலிதா அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளால் அமைக்கப்பட்ட அமைப்பு, உலகத் தமிழ்ச் சங்கம் (மதுரை). இச்சங்கம் உலகின் பல்வேறு பாகங்களில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்குபெறும் பன்னாட்டுப் பரிமாற்றக் கருத்தரங்கங்களை நடத்திவருகிறது. அரசு சார்பான கருத்தரங்குகளுக்கே உரிய வரம்புகள் நெகிழ்ந்துள்ளன.
நவீன எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். மதுரையிலும் சென்னையிலும் இந்த மாதம் நடந்த கருத்தரங்குகளைப் போல மேலும் பல நகரங்களில் நடக்கவிருப்பதாகத் தெரிகிறது. பண்டைய இலக்கியத்துடன் சமகால இலக்கியப் போக்குகளுக்கும் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தால், தமிழின் வீச்சு காலத்துக்கேற்ப விரிவடையும்.