இலக்கியம்

ஆலிஸ் சொல்லும் கீழைத் தத்துவம்

செய்திப்பிரிவு

எத்தனை கடினமான விஷயத்தையும் சுடச்சுட மசால்வடை சாப்பிடுவதுபோல ருசியானதாக மாற்றிவிட முடியுமா? அதைத்தான், ‘கீழைத் தத்துவம் - தொடக்க நிலையினருக்கு’ என்ற ரகளையான புத்தகம் சாதித்திருக்கிறது. இந்தப் புத்தகம் தலையணை அளவில் இல்லை என்பதுடன் உள்ளடக்கத்தை உள்ளங்கையில் வைத்துக் காட்டுகிற மாதிரியான விளக்கப் படங்கள் கொண்டிருப்பதால் வாசகருடன் மிகவும் சரளமாக உறவாடுகிறது.

தொலைக்காட்சி, கிரிக்கெட், சினிமா, இணையம் என்று சிதறடிக்கப்பட்ட இன்றைய வாகர்களுக்கு கீழைத் தத்துவம் எனும் பெருங்கடலை ரசனை மிக்க வாசிப்பாக மாற்றிக் காட்டி இந்தப் புத்தகம் ஆச்சர்யப்படுத்துகிறது. இதற்காக வெகுவாக எளிமைப்படுத்தப் பட்ட ஜிம் பவலின் புத்தகம், க. பூரணசந்திரனால் எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை இந்த முயற்சி. ஜோ. லீ எனும் அசாதாரணமான ஓவியரின் விளக்கப் படங்கள் நம்மைத் தத்துவமும் சமயமும் செழித்திருந்த காலக் கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

இந்தியா, சீனா, ஜப்பான், திபெத் நாடுகளின் முதன்மையான தத்துவங்களையும் மதங்களையும் எளிதாக அறிமுகப்படுத்தும் நான்கு பிரிவுகளின் கீழ் சின்னச் சின்ன அத்தியாயங்கள் விரிகின்றன. இந்த அத்தியாயங்களில் மூல ஆசிரியர் - மொழி பெயர்ப்பாளர் இருவருமே அளவாக ஒரு எல்லைக்குள் நின்றுகொள்ள அவர்களின் வேலையை கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கையில் எடுத்துக்கொண்டு தெளிவாகவும் பகடியுடனும் நமக்கு ருசியாகக் கீழைத் தத்துவ விருந்து படைக்கின்றன. புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த அழகரசனின் எளிய அறிமுகம் நாளை வாசித்துக்கொள்ளலாம் என்ற நினைப்பைத் துடைத்தெறிந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, இந்தியத் தத்துவத்தின் நான்காவது சிந்தனைப் புலமாக இருக்கும் யோகம் இன்றைய நவீன வாழ்க்கை வரை தொடர்ந்துவருகிறது. இதைத் தொகுத்த பதஞ்சலி முனிவர் பற்றியும் இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஆலீஸ் மற்றும் கம்பளிப் புழு கதாபாத்திரங்கள் விளக்கும் அற்புதக் கையேடு இது.

கீழைத் தத்துவம் தொடக்க நிலையினருக்கு
ஜிம் பவல்
தமிழில்: க.பூர்ணசந்திரன்
அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம்- 621 310
தொடர்புக்கு: 04332-273444
விலை: ரூ.160/-

- சொல்லாளன்

SCROLL FOR NEXT