இலக்கியம்

கவிதைகளின் காதலன் நான்! - இயக்குநர் லிங்குசாமி

செய்திப்பிரிவு

பள்ளி நாட்களிலேயே புத்தகங்கள் என்னை ஈர்த்தன. கல்லூரி நாட்களில் கவிஞனாகிவிட்டேன். ஒருபக்கம் கவிதை எழுதிக்கொண்டே கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என்று தேடித்தேடி வாசித்தேன். அப்போது சுஜாதா என்னைக் கட்டிப்போட்டிருந்தார். அவரது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, ‘நைலான் கயிறு’ எல்லாமே அப்போது எனக்கு அத்துப்படி. தொடர்ந்து தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, க.நா.சு. என்று பலர் என் மனதில் இடம்பிடித்தார்கள். இடையில் புத்தகங்களைப் படிக்க நேரமில்லாமல் போயிற்று.

உதவி இயக்குநரான பின்னர், எனது அறைத் தோழரும் எனது படங்களின் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி வாங்கிக் குவித்த புத்தகங்களை அடிக்கடி திறந்து பார்ப்பேன் (பக்கங்களுக்கு இடையில், மனிதர் பணத்தைப் பதுக்கியிருப்பார்!). புத்தகக் காதல் மீண்டும் தொற்றிக்கொண்டது. வைக்கம் முகமது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ படித்துவிட்டுப் பல நாட்கள் அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஜெயமோகன்,

எஸ். ராமகிருஷ்ணன் என்று எனது விருப்பப் பட்டியலை விரித்துக்கொண்டே செல்லலாம். கவிஞர்கள் மீது எனக்கு அளப்பரிய ஈர்ப்பு உண்டு. கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், அறிவுமதி என்று அது ஒரு தனிப் பட்டியல். ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் மனப்பாடமாக என்னால் சொல்ல முடியும். எனது கவிதைகளை, ‘லிங்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டேன். அதன் பிறகு எழுதிய கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். கவிதைகளின் காதலன் அல்லவா, விடுவேனா!

உதவி இயக்குநராக இருந்தபோது, புத்தகங்கள் வாங்கக் காசு இருந்ததோ இல்லையோ, வாசிக்க நேரம் இருந்தது. இப்போது ஆயிரக் கணக்கில் செலவுசெய்து புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறேன். வாசிக்கத்தான் நேரம் ஒதுக்க முடியவில்லை!

SCROLL FOR NEXT