இலக்கியம்

இசையும் தமிழ்த் தாத்தாவும் | நம் காலத்தின் கவிதைகள்

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றிநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914-ல் எழுதப்பட்டவித்துவான்கள்பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சா.வின் குறிப்புகள் காலத்தால் சிதைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு, மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம் ஆகியோரால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

திருவையாறு தியாகப்பிரம்மம் நாதோபாசகர் இசையில் மாமேதையாக வேண்டுமென்கிற ஆசையில் தனது குருவான ஸொண்டி சாம்பையரிடம் 18 ஆண்டுகள் குருகுல வாசம் செய்தார். மோகனம் வரதராஜ ஐயர் பூர்ணசந்திர உதயத்தில் குளக்கரையில் அமர்ந்து பாடும் மோகன ராகம் கேட்க, உடையார்பாளையம் மகாராஜா யுவரங்க பூபதி பரதேசி வேடமிட்டு வந்தார். வீணை இசையில் தன்னைத் தோற்கடித்த மகனின் கையில் முத்தமிட்டு பாராட்டுவதுபோல் பிடித்து, வீணை வாசிக்க முடியாதபடி விரல்களைக் கடித்துவிட்ட பிறகும், உருக்கினால் கவர் செய்து அணிந்துகொண்டு வாசித்தவர் மகான் வேங்கட சுப்பையர். இப்படி, சுவையான பல குறிப்புகள் இந்நூலின் வழி அறிய கிடைக்கின்றன.

தமிழிசை குறித்தும், இசை வித்துவான்கள் பற்றியும் ஆராய விரும்புபவர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்நூல்!

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்
உ.வே. சாமிநாதையர்
பதிப்பாசிரியர்கள்: மகாவித்துவான் வே.சிவசுப்பிரமணியன்
முனைவர் கோ.உத்திராடம்
வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரைச் சாலை,
பெசன்ட் நகர், சென்னை 600 090
பக்கம்: 112 விலை: ரூ.80/-
தொடர்புக்கு: 044 2491 1697

- மு. முருகேஷ்

நம் காலத்தின் கவிதைகள்

சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்விகேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன.

எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் என்பதை இவரது ‘மண்’ கவிதை துயரத்துடன் பேசுகிறது. எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி உருவாக்கப்படும் நகரத்து ஆடம்பரங்களையும், மற்ற மனிதர்கள் மேல்நாம் காட்டும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகிறது ‘நறுமணங்களுக்கு அப்பால்’. நவீ்ன ஜனநாயகமும் அறிவியலும் விடுதலைக் கோட்பாடுகளும் மக்களுக்குச் சுதந்திரத்தையும் நிம்மதியையும் தரவில்லை என்ற ஏக்கத்தை இவர் கவிதைகள் ஏக்கத்துடன், எள்ளலுடன், துயரத்துடன் முன்வைக்கின்றன. எந்த மாற்றங்களும் மனிதனின் அடிப்படைகளை மாற்றவில்லை என்பதை நாயகர்களின் வருகை சொல்கிறது.

"அரசர் வருகிறார்! அரசி வருகிறார்! இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்! தெருப்புழுதி பறக்கத் தேர்கள் விரைகின்றன. நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம். தேர்க்கால்களில் கன்றுகள்/ அடிபடுவது பற்றிக் கவலையில்லை. 108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை." என்று தொடங்கும் கவிதை நெருக்கடிநிலைக் காலகட்டத்தைப் பற்றி கவிதை எழுதிய ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இன்னமும் நெருக்கடிநிலைக் காலகட்டம் தொடர்கிறது.

பாலச்சந்திரனின் இறுதியுணவு
சுகுணாதிவாகர்
வெளியீடு: பட்டாம்பூச்சி பதிப்பகம்
45/21, இருசப்பா தெரு, விவேகானந்தர் இல்லம்,
சென்னை - 600 005. விலை: ரூ.50
அலைபேசி: 98410 03366

- வினுபவித்ரா

SCROLL FOR NEXT