இலக்கியம்

ஓலைச்சுவடிகள் காட்டும் பண்பாடு

கோ.உத்திராடம்

மனித இனத்தின் வாழ்க்கை முறை வரலாற்று ஆவணமாகச் சுவடிகளைக் கருதலாம். மனிதனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலக்கியமாகவும் கலையாகவும் உருவெடுத்துக் காலங்காலமாக மனித வாழ்வுடன் உறவாடி வருகின்றன. மனித வாழ்வில் அறிய வேண்டுபவை அளவில்லாதன என்றாலும் வித்தைகளும் கலைகளும் இன்றியமையாதவை. இவற்றுள் வித்தைகள் முப்பத்திரண்டு, கலைகள் அறுபத்திநான்கு என்று பாகுபாடுத்தி அவற்றின் இயல்புகளை விரித்துச் சொல்கிறது சுக்கிரநீதி எனும் நூல். பழங்காலத்திருந்தே தமிழ் மக்கள் ஓவியம், கட்டிடம், சிற்பம், இசை, நடனம் போன்ற கலைகளில் திறம்பட்டு விளங்கியுள்ளனர். கலையை வளர்ப்பதற்காகப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். அத்தகைய நூல்களாக ஓலைச் சுவடிகளில் உள்ள கட்டிடச் சாத்திரம், இசை சாத்திரம் போன்றவற்றைக் கூறலாம்.

சுவடிகளின் உள்ளடக்கம்

தமிழ் ஓலைச்சுவடிகளில் மருத்துவம், சோதிடம், சமயம், கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு போன்ற பல்வேறு பொருண்மையில் காணக்கிடக்கின்றன. இவற்றுள் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை மருத்துவம் போன்ற மரபுவழி அறிவியல் தொடர்பானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. எஞ்சியவற்றுள் 25 விழுக்காடு கலை, இலக்கியம், சமயம், வரலாறு தொடர்பானவை. ஏனையவை சோதிடம், மாந்திரீகம், போன்ற நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தன என்று கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை தொடர்பான சுவடிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால், ஓவியம் தொடர்பான இலக்கியம் கிடைக்கவில்லை.

சுவடிக் கலை வடிவங்கள்

ஓலைச்சுவடிகளைத் தயாரிப்போரின் திறமைக்கும் கலையுணர்வுக்கும் இறைபக்திக்கும் ஏற்ப அவற்றின் வடிவத்தை அமைந்துள்ளனர். சிவலிங்கம், உருத்திராக்கம், சக்கரம், மீன், விசிறி, பம்பரம் போன்ற பல்வேறு வடிவங்களில் சுவடிகளைக் கலைநயத்துடன் அமைத்துள்ளனர்.

சக்கரம் - சக்கர வடிவில் அமைக்கப்பட்ட ஓலைச்சுவடியில் சூலினி எனும் தேவதையின் மீது பாடப்பட்ட மந்திரம் எழுதப்பட்டுள்ளது. சிவலிங்கம் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை நீள்வடிவ ஏடுகளில் எழுதாமல், சிவலிங்கமாக அமையும் வண்ணம் ஏடுகளை வெட்டி உருவாக்கியுள்ளனர்.

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் இரு சிவலிங்க வடிவச் சுவடிகள் உள்ளன. ஒன்று வெள்ளோலையைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் திருவாசகப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இச்சுவடி மதிலைப்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேல் கவிராயரிடமிருந்து பெறப்பட்டது. திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகத்திலும் சிவலிங்கம் வடிவச் சுவடி ஒன்றுள்ளது.

சுவடிப் பலகை ஓவியங்கள்

எழுத்தாணி கொண்டும் தூரிகைகள் கொண்டும் அழகான ஓவியங்கள் ஓலைச்சுவடிகளில் தீட்டப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இம்மரபு வடஇந்தியாவில் அதிகம் இருந்து வந்தது. இவற்றில் புராண நிகழ்ச்சிகளும் வரலாற்று நிகழ்ச்சிகளும் தீட்டப்பட்டுள்ளன.

ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கட்டப்பட்ட பலகைகளின் மீது பல வகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் நேரடியாக மரப் பலகையிலும் பலகைமீது துணியை ஒட்டி அதன் மீது வரையப்பட்டும் உள்ளன. கீழ்ச்சித்தாமூர் ஜினகாஞ்சி சமண மடத்தில் உள்ள மூன்று ஓலைச்சுவடிப் பலகைகளில் சமண சமய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கட்டையின் மீது துணி ஒட்டப்பட்டுச் சிவப்பு நிற பின்புலத்தில் மஞ்சள் கருநிறக் கோடுகளால் வட்ட வடிவத்தில் மலர்கள், இலைகள்,செடிகள் நான்கு சுடர்கள் உள்ள தர்மச் சக்கரம், பத்மாசனத்தில் துறவி, சரஸ்வதி பீடம், ஆகிய உருவங்கள் மேல் பலகையில் வரைப்பட்டுள்ளன. சுவடிக்கட்டின் கீழ்ப்பலகையில் சிவப்புப் பின்புலத்தில் மஞ்சள் மற்றும் கருப்புநிறக்கோடுகளால் ஸ்ருததேவி உருவம் வரையப்பட்டு பச்சை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்தை அடுத்து ஐந்து துறவிகள் பத்மாசனத்தில் அமர்ந்து சரஸ்வதி பீடத்தின் மீதுள்ள சுவடிக்கட்டிலிருந்து ஏட்டை எடுத்து வாசிக்கும் பணியில் உள்ளனர். அருகில் சுவடித் தூக்கு காட்டப்பட்டுள்ளது.

மற்றொரு சுவடிக்கட்டு கீழ்ப்பலகையில் பூரண கும்பம், மாலையிடும் யானை, பூ வேலைப்பாடுகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஆகியன மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளன. மற்றொருச் சுவடி பலகையின் முன்புறம் கருப்பு மஞ்சள் பின்புலத்தில் மஞ்சள், சிவப்பு, கருப்பு, பச்சை வண்ணங்களில் மலர்கள், தொங்கல்கள் ஆகியன தீட்டப்பட்டுள்ளன. பின்புறம் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொன்னிறம், சிவப்பு பச்சை போன்ற பல வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியத்தின் காலம் கி.பி.18-19 ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகக் காட்சியகத்தில் உள்ள மதுரை வீரன் கதை அம்மானை (TD.823), நளவெண்பா (TD.68), அரிச்சுவடி (D.2) சீவகசிந்தாமணி (TD.183) ஆகிய சுவடிப் பலகைகளின்மீது பூ ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தெலுங்கு இராமாயணச் (ஆர்.18209) சுவடிப் பலகை செப்புத் தகடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இச்செப்புத்தகட்டில் தசாவதாரம், அனுமன், கருடன் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சுவடிகளில் கோட்டோவியங்கள்

ஓலைச்சுவடிகளில்அரிதின் முயன்று எழுத்தாணிகொண்டு சில கோட்டோவியங்களை வரைந்துள்ளனர். இத்தகைய ஓவிய ஏடுகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தர்மபுரி அகழ்வைப்பகம் போன்ற இடங்களில் கிடைக்கின்றன.

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகக் காட்சியகத்தில் உள்ள ஓர் ஏட்டுச்சுவடியில் முன்பின் பக்கங்களில் வைணவக் கடவுளான விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் திருமால் பாம்பணையில் பள்ளிகொண்ட காட்சியும் கோட்டோவியங்களக வரையப்பட்டுள்ளன. 11 செ.மீ நீளமும் 3.5 செ.மீ அகலமும் கொண்ட சுவடியில் சிவன், பிரம்மா, பத்துத்தலை இராவணன், சூர்ப்பநகை என இருப்பத்தைந்திற்கும் மேற்பட்ட கோட்டோவியங்கள் வரையப்பட்டுள்ளன. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ‘திருவாய்மொழி வாசகமாலை’ எனும் சுவடியில் கிடந்த கோலத் திருமாலின் வரைகோட்டோவியங்கள் காணப்படுகின்றது. தர்மபுரி அகழ்வைப்பகத்தில் கிருஷ்ண நாடகம் எனும் ஓலைச்சுவடியில் உள்ள ஓர் ஏட்டில் நாடகக் காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இத்தகைய நுட்பமான பட்டறிவு விவரங்களை அன்றைய காலகட்டத்தில் ஓலைச்சுவடிகளில்தான் பதித்திருக்க முடியும். நுட்ப அறிவு முறைகள் வாய்மொழியாகக் கூறப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் பல தலைமுறை களாக அடுத்தடுத்துக் கையளிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது உண்மை யென்றாலும், அவை எழுத்து வடிவம் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன என்பதையும் காணமுடிகிறது. இவற்றின் தொடர்ச்சி யாகவே, இப்போது நமக்குக் கிடைக்கின்ற ஓலைச்சுவடிகள் விளங்குகின்றன. இவை யாவும் தமிழரின் அறிவுச் செல்வங்களின் ஒரு பகுதிகளாகவே அமைந்திருக்கின்றன.

- கட்டுரையாளர், உ.வே.சாமிநாத அய்யர் நூலக நூலகர்

SCROLL FOR NEXT